அரசு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தினால் அபராதம் விதிக்கப்படும் முதன்மை கல்வி அதிகாரி எச்சரிக்கை


அரசு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தினால் அபராதம் விதிக்கப்படும் முதன்மை கல்வி அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 July 2019 4:30 AM IST (Updated: 25 July 2019 11:11 PM IST)
t-max-icont-min-icon

அரசு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் சுயநிதி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என 137 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் மாவட்ட கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன.

இதனை தொடர்ந்து நேற்று தனியார் பள்ளி நிர்வாகிகளை அழைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி ஆலோசனை கூட்டம் நடத்தி சில அறிவுரைகளை வழங்கினார்.

இதுபற்றி முதன்மை கல்வி அதிகாரி முனுசாமியிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகளை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆய்வின்போது, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளை நடத்த அங்கீகாரம் பெற்றுவிட்டு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை சேர்த்துள்ள பள்ளிகள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதிக்குள் வேறு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும். தவறும்பட்சத்தில் விதியை மீறி சேர்க்கப்பட்ட மாணவர்கள் கல்வித்துறை அதிகாரிகள் மூலமாக வேறு பள்ளிகளுக்கு அனுப்பப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story