கார் மீது அரசு பஸ் மோதல்; 3 பேர் பலி


கார் மீது அரசு பஸ் மோதல்; 3 பேர் பலி
x
தினத்தந்தி 26 July 2019 3:30 AM IST (Updated: 26 July 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே கார் மீது அரசு பஸ் மோதியதில் 3 பேர் பலியானார்கள்.

திருப்பூர், 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கவுண்டப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்பாண்டி (வயது 38). சுரேஷ்பாண்டிக்கு திருமணமாகி, 8 வயதில் ஒரு மகள் உள்ளார். சுரேஷ்பாண்டி மதுரையில் கட்டிடங்களுக்கு எலக்ட்ரிக்கல் வேலைகளை செய்து கொடுக்கும் நிறுவனம் நடத்தி வந்தார்.

திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் வேலைகள் அவர் செய்து இருந்தார். அதில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக சுரேஷ்பாண்டி தனது காரில் பள்ளபட்டியிலிருந்து நேற்று காலை 6.30 மணிக்கு புறப்பட்டார். அவருடன், அவருடைய நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்த அவருடைய அண்ணன் மகன் ராஜபாண்டி (26), வத்தலக்குண்டு காசுக்கார செட்டியார் தெருவை சேர்ந்த சிவநேசன் (26) மற்றும் திண்டுக்கல் அருகே உள்ள மைக்கேல்பாளையத்தை சேர்ந்த சிரில்வளன் (22) ஆகியோரும் காரில் சென்றுள்ளனர்.

காரை ராஜபாண்டி ஓட்டினார். இவர்களுடைய கார் தாராபுரத்தை கடந்து திருப்பூர் சாலையில் கண்ணாங்கோவில் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கோவையிலிருந்து மதுரை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

இவர்களுடைய காரின் பக்கவாட்டில் அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த சுரேஷ்பாண்டி, சிவநேசன், சிரில்வளன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பலத்த காயம் அடைந்த ராஜபாண்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story