பாதாள சாக்கடை குழியில் இருந்து பொங்கி சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்


பாதாள சாக்கடை குழியில் இருந்து பொங்கி சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
x
தினத்தந்தி 26 July 2019 3:30 AM IST (Updated: 26 July 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் பாதாள சாக்கடை குழிகளில் இருந்து கழிவுநீர் பொங்கி சாலையில் வழிந்தோடுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.

கடலூர், 

கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்டம் சரியான தொலைநோக்கு பார்வையில்லாமல் வடிவமைக்கப்பட்டு உள்ளதோ என்ற சந்தேகத்தை சமூக ஆர்வலர்கள் கிளப்புகிறார்கள்.

இத்திட்டத்தின் கீழ் 16 ஆயிரம் இணைப்புகள் கொடுக்க முடியும், ஆனால் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து சுமார் 2,300 இணைப்புகள் மட்டுமே பெற்றனர்.

இதனால் வீடுதோறும் பாதாள சாக்கடை இணைப்பு என்ற திட்டத்தின் கீழ், வீடுகள் தோறும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை சுமார் 7 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சுமார் 9,300 பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. இதில் இருந்து தினமும் 50 லட்சம் லிட்டர் கழிவுநீர் பெறப்பட்டு தேவனாம்பட்டினத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. தேவனாம்பட்டினத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின், சுத்திகரிப்பு திறன் ஒருநாளுக்கு ஒரு கோடியே 25 லட்சம் லிட்டராகும்.

சுத்திகரிப்பு நிலையம் அதன் முழு சுத்திகரிப்பு திறனை அடையாத நிலையிலேயே பல இடங்களில் பாதாள சாக்கடையின் ஆள் இறங்கும் குழிகளில் இருந்து கழிவுநீர் பொங்கி சாலையில் வழிந்தோடுகிற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. பாதாள சாக்கடை கழிவுநீர் சேகரிப்பு நிலையத்தில் உள்ள தொட்டிகள் நிரம்பும் போது, அங்கிருந்து அவற்றை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்புவதில் காலதாமதம் ஏற்படும் போது, பாதாள சாக்கடை குழிகளில் இருந்து கழிவுநீர் வழிந்தோடுவதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக கடலூர் இம்பீரியல் சாலையில் உள்ள கூட்டுறவு அச்சகம் அருகே நள்ளிரவில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் பொங்கி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே இதனை நகராட்சி அதிகாரிகள் கண்காணித்து சீர் செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதேபோல் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் உடைந்து நொறுங்கி காணப்படுகின்றன. எனவே நகராட்சி பொறியாளர்கள் இதனை கண்காணித்து உடைந்துள்ள மூடிகளுக்கு பதிலாக, புதிய மூடிகளை போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story