சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் ஆராய்ச்சிகள் அமையவேண்டும் மலேசிய பல்கலைக்கழக பேராசிரியர் பேச்சு
சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் ஆராய்ச்சிகள் அமையவேண்டும் என்று மலேசிய பல்கலைக்கழக பேராசிரியர் பேசினார்.
காரைக்குடி,
காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழக விலங்குகள் நல மற்றும் மேலாண்மைத் துறையின் சார்பில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக நிதி உதவித் திட்டத்தின் கீழ் மூலக்கூறு உடலியல் சிகிச்சை மற்றும் பரிசோதனை மருத்துவம் என்ற தலைப்பில் 2 நாட்கள் சர்வதேச கருத்தரங்க தொடக்க விழா அறிவியல் வளாக கருத்தரங்க அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கில் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய புதிய நோய்கள் குறித்தும் அதை தடுப்பதற்கான புதிய வழிமுறைகளை கண்டு பிடிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கருத்தரங்கிற்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அப்போது அவர், உலகின் தலை சிறந்த தர வரிசையில் இடம்பெற்றுள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து பாட வல்லுனர்களை அழகப்பா பல்கலைக் கழகத்திற்கு வரவழைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் சமீபத்திய அறிவியல் வளர்ச்சிகள் குறித்த கருத்தரங்குகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தற்போதுள்ள மருந்துகளுக்கு கட்டுப்படாத நோய்கள் பற்றிய ஆராய்ச்சியில் அதனால் ஏற்படக் கூடிய புதிய வகை நோய்களையும் பற்றி ஆராய வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது. இது போன்ற கருத்தரங்குகளில் பங்கேற்கும் அறிஞர்களைச் சந்திக்கும்போது புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு வழிவகுப்பதோடு, இங்குள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கிறது என்றார்.
கருத்தரங்கில் மலேசிய செயின்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டாங் பேசியதாவது:- மூலக்கூறு உளவியல் சிகிச்சை மற்றும் பரிசோதனை, மருத்துவம் ஆகிய ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. இதுதொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் இன்றைய நவீன தொழிற் புரட்சி யுகத்தில் மருத்துவத் துறையை அடுத்த வளர்ச்சி இடத்திற்கு எடுத்துச் செல்லும். நமது பாரம்பரிய மருத்துவம், நவீன மருத்துவக் கண்டுபிடிப்புகள் இணையும்போது தலைசிறந்த மருத்துவ சேவையை சமுதாயத்திற்கு வழங்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
மலேசிய செயின்ஸ் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர் ரமணன் சுப்பிரமணியம் பேசும்போது, விலங்குகள் மற்றும் மனிதர்களை தாக்கும் புதிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய வகையில் ஆராய்ச்சிகள் அமைய வேண்டும் என்று கூறினார். இவரை தொடர்ந்து மலேசிய அமிஸ்ட் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் மாரிமுத்து பேசினார். 58 ஆராய்ச்சி கட்டுரைகளில் சுருக்கங்கள் அடங்கிய மலரை துணைவேந்தர் வெளியிட பிரதிகளை அறிஞர்கள் பெற்றுக்கொண்டனர். இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து 280-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர். முன்னதாக விலங்குகள் மற்றும் மேலாண்மை துறை பேராசிரியர் வசீகரன் வரவேற்றார். முனைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story