மானாமதுரை பேரூராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
மானாமதுரை,
முதல்-அமைச்சர் உத்தரவின்படியும், மாவட்ட கலெக்டர், பேரூராட்சிகள் துறை இயக்குனர், உதவி இயக்குனர் ஆகியோர் அறிவுறுத்தலின்படியும் மானாமதுரை பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்புக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி, மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்தல், கண்மாய்கள், தண்ணீர் வரத்துக் கால்வாய்கள், ஊருணிகள் சுத்தம் செய்து புனரமைக்கப்படுகின்றன.
மேலும், பேரூராட்சிக்குட்பட்ட மீன் மார்க்கெட், வளம் மீட்பு பூங்கா, சுக்கான் ஊருணி, செட்டிகுளம் ஊருணி, ரயில்வே காலனி, பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்படி, முதல்கட்டமாக இதுவரை நிழல் மற்றும் பயன்தரக்கூடிய வேம்பு, புளி, பூவரசு, புங்கை, கொய்யா மற்றும் பூக்கள் வகை என 440 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் அபுபக்கர், சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் மேற்பார்வையில், இந்த மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இது குறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன் கூறியது:-
மானாமதுரை பேரூராட்சி பகுதியில் அனைத்துக் கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பேரூராட்சி எல்லையில் அமைந்துள்ள ஊருணி, குளங்கள் எந்திரங்கள், பணியாளர்கள் மூலம் புனரமைக்கப்பட்டு, மழைநீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
முதல் கட்டமாக 440 மரக்கன்றுகள் நடப்பட்டு, பேரூராட்சி பணியாளர்கள் மூலம் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படுகிறது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில், இன்னும் கூடுதலாக மரக்கன்றுகள் நடப்படும். மழைநீரை சேகரிக்க பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றார்.
Related Tags :
Next Story