திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ.33 லட்சத்தில் கபடி மைதானம் அமைக்கும் பணி நிறைவு


திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ.33 லட்சத்தில் கபடி மைதானம் அமைக்கும் பணி நிறைவு
x
தினத்தந்தி 26 July 2019 4:15 AM IST (Updated: 26 July 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ.33 லட்சத்தில் சர்வதேச தரத்தில் கபடி மைதானம் அமைக்கும் பணி முடிவடைந்து விரைவில் திறக்கப்பட உள்ளது.

திருச்சி,

கபடி விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் திருச்சியில் கபடி மைதானம் அமைக்கப்பட வேண்டும் என்பது கபடியில் ஆர்வம் உள்ளவர்களின் நீண்ட கால கோரிக்கை ஆகும். இந்த கோரிக்கையின் அடிப்படையில் திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர போலீஸ் ஆணையரகம் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ.33 லட்சம் திட்ட மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் கபடி மைதானம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.

நிறைவடைந்தது

தற்போது இந்த பணி நிறைவடைந்து உள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு கபடி போட்டிகளை நடத்தும் வகையில் இந்த மைதானம் உள்ளது. விளையாட்டை ரசிகர்கள் பார்ப்பதற்கு வசதியாக இரண்டு ‘காலரி’களும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த காலரிகளில் சுமார் 300 பேர் அமர்ந்து போட்டிகளை பார்க்க முடியும்.

முதல் மைதானம்

‘தமிழகத்திலேயே திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மட்டும் தான் முதன் முதலாக அரசு சார்பில் கபடி மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மைதானம் திறக்கப்பட்ட பின்னர் மாநில அளவில் மற்றும் தேசிய அளவிலான கபடி போட்டிகளை இங்கு நடத்த முடியும்’ என்று மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரபு கூறினார்.

இந்த கபடி மைதானத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து விரைவில் திறப்பு விழா காணும் நிலையில் இருந்தாலும் மண் அரிப்பை தடுக்க மைதானத்தின் நான்கு புறமும் தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும், மேலும் மைதானத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியிலும் காலரி அமைக்கப்பட வேண்டும், அத்துடன் பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட வேண்டும் என்பது விளையாட்டு ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

Next Story