கடந்த 10 ஆண்டுகளில் மாயமானவர்களை கண்டுபிடிக்க போலீசார் புது முயற்சி டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது


கடந்த 10 ஆண்டுகளில் மாயமானவர்களை கண்டுபிடிக்க போலீசார் புது முயற்சி டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 26 July 2019 4:30 AM IST (Updated: 26 July 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி சரகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மாயமானவர்களை கண்டுபிடிக்க போலீசார் புதிய முயற்சியை கையாண்டனர்.

திருச்சி,

திருச்சி சரகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இதுவரை (2019), கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் திருச்சி மாநகர், புறநகர், கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் ரெயில்வே போலீஸ் நிலையங்களில் அடையாளம் தெரியாமல் இறந்தவர்கள் எண்ணிக்கை 926. அதே காலக்கட்டத்தில் மாயமானவர்களை கண்டுபிடித்து தரக்கோரி பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை 565.

கடந்த 10 ஆண்டுகளில் இந்த வழக்குகளில் கண்டு பிடிக்கப்படாமல் நிலுவையில் 500-க்கும் மேற்பட்டவை உள்ளன. இந்த நிலையில் மாயமானவர்களை கண்டுபிடிக்கவும், விபத்து, தூக்குப்போட்டு தற்கொலை, அனாதை பிணம் உள்ளிட்டவைகளை கண்டுபிடித்து தீர்வு காண திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். போலீசாரின் இந்த புது முயற்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் 10 ஆண்டுகளில் மாயமானவர்கள் குறித்து புகார் கொடுத்த உறவினர்கள் நேற்று வரவழைக்கப்பட்டு, திருச்சி சுப்பிரமணியபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. மேலும் அந்தந்த போலீஸ் நிலையங்களில் இருந்தும் போலீசார் வந்திருந்தனர்.

திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் முன்னிலை வகித்தார். பின்னர் அங்கு புரொஜக்டர் மூலம் பெரிய திரையில், வாகனம் மோதி இறந்தவர்களின் சடலங்கள், மாயமானவர்களின் புகைப்படம் உள்ளிட்டவை காண்பிக்கப்பட்டது. அதில் காண்பிக்கப்பட்ட புகைப்படங்களில் மாயமான உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா? என நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

சிலர் அடையாளம் காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இது குறித்து டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

திருச்சி சரகத்தில் உள்ள 5 மாவட்டங்கள், திருச்சி மாநகரம், திருச்சி ரெயில்வே ஆகிய காவல் யூனிட்டுகளில் காணாமல் போனவர்கள் சுமார் 500 பேர் இருக்கிறார்கள். இறந்து அடையாளம் தெரியாமல் இருக்கக்கூடிய நபர்கள் 900 பேர் இருக்கிறார்கள். காணாமல் போனவர்களின் அடையாளங்களை அவர்களின் உறவினர்கள் மூலமாக, அடையாளம் காணமுடிகிறதா? என்ற புது முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் கூறும் அடையாளங்கள், இங்கு புகைப்படத்துடன் ஒத்து போகிறதா? என்று ஒப்பிட்டு பார்த்து கண்டுபிடித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வசதியாக திருச்சி சரகத்தில் 3 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் மட்டும் 2 இடங்களிலும், பெரம்பலூரில் ஒரு இடத்திலும் நடத்தப்படுகிறது. இதன் மூலம் யாராவது கண்டு பிடிக்கப்பட்டால் மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story