பரமக்குடியில் டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட முயற்சி
பரமக்குடியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது கடைக்கு பூட்டுப்போட முயன்ற பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பரமக்குடி,
பரமக்குடி மக்கள் நடமாட்டம் நிறைந்த பெரிய கடை பஜாரில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதனால் குடிமகன்கள் குடித்துவிட்டு பாதையில் அலங்கோலமாக படுத்து இருப்பதும், போதையில் அப்பகுதியில் செல்பவர்களிடம் தகராறு செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் குடியிருப்பவர்களும், பெரிய கடை பஜாருக்கு வந்து செல்லும் பொதுமக்களும் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த கடையை அகற்றக்கோரி மாவட்ட நிர்வாகம், டாஸ்மாக் உயர் அதிகாரிகள், போலீசாரிடம் நேரிலும், மனுக்கள் மூலமாகவும் பலமுறை வலியுறுத்தியும் இதுநாள்வரை எவ்வித நடடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் அந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்தினர். நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் வக்கீல் பசுமலை, நல்லாசிரியர் சந்தியாகு ஆகியோர் தலைமை தாங்கினர். வியாபாரிகள் சங்க பொது செயலாளர் ராசி போஸ், பொருளாளர் சுப்பையா, வைகை பாசன விவசாயிகள் சங்க செயலாளர் மதுரைவீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழக தலைவர் அரவிந்தன், ஆயிர வைசிய சபை செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் சுப்பிரமணியம், மனித நேய மக்கள் கட்சி செய்யது இபுராகிம், வக்கீல் முத்துக்கண்ணன், சமூக ஆர்வலர் சவுந்திர பாண்டியன் மற்றும் பொதுநல அமைப்பினர், மகளிர் அமைப்பினர் பேசினர்.
பின்பு அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட சென்றனர்.
கடையின் அருகே சென்றபோது போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். ஆனால் பொதுமக்கள் போலீசாரை மீறி கடைக்கு பூட்டுபோட செல்ல முயன்றதால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கு மிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு பரமக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் தலைமையில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச்சென்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story