விவசாயிகளுக்கு அதிக மகசூலை அள்ளித்தரும் கடல்பாசியை கொள்முதல் செய்ய மீன்வளத்துறை ஏற்பாடு
விவசாயிகளுக்கு அதிக மகசூலை அள்ளித்தரும் சிறந்த இயற்கை உரமாக பயன்படும் கடல்பாசி உயிர்ச்சத்து முதன்முதலாக தமிழக அரசு மீன்வளத்துறை மூலம் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,
இந்த பூமியில் வளரும் பல தாவரங்கள் மூலிகைகளாக பயன்படுவதை போல கடலில் வளரும் கடல்பாசிகள் பல வகைகளில் மருந்தாக பயன்பட்டு வருகிறது. இந்த கடல்பாசிகள் நீர்ச்சத்தாகவும், பவுடராகவும் பலவகையான பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. குறிப்பாக கடல்பாசியை காயவைத்து அதனை அரைத்து தயாரிக்கப்படும் பவுடர் வகையை கொண்டு இதுநாள் வரை ஐஸ்கிரீம், ஜிகர்தண்டா போன்ற பல வகையான உணவுபொருட்கள், உயிர்காக்கும் மருந்து பொருட்கள், முகப்பூச்சு கிரீம்கள் போன்ற எண்ணிலடங்கா பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக கடல்பாசியில் இருந்து 90 சதவீத நீர்ச்சத்து நீக்கப்பட்டு 10 சதவீத நார்பொருட்களில் இருந்து மேற்கண்டவை தயாரிக்கப்படுகிறது. மீதம் உள்ள 90 சதவீத நீர்ச்சத்து இதுநாள் வரை வீணாக்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த நீர்ச்சத்தில் மண்ணுக்கு தேவையான அரிய இயற்கை உரச்சத்து இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடல்பாசியினை அரைத்து அதில் இருந்து எடுக்கப்படும் சாறு ஏராளமான உயிர்ச்சத்தினை இயற்கையாக கொண்டுள்ளதாக ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கேற்ப ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கடல்பாசியை பெங்களுர், ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சில தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து பயன்படுத்தியதில் 3 மடங்கு அளவில் ரோஜா மலர்கள் பூத்து நல்ல லாபம் கிடைத்துள்ளது. அந்த அளவிற்கு இந்த கடல்பாசி உரச்சத்தில் அதிகளவில் இயற்கை உரம் நிறைந்துள்ளது.
மண்ணின் வளம் கூடுவதால் வறட்சி தாங்கி வளரும் தன்மை கொண்டதாக மண்வளத்தை மாற்றிவிடுகிறது. மேலும் செயற்கை உரங்களை விட இந்த கடல்பாசி இயற்கை உரத்திற்கு செலவும் மிகக் குறைவானது. இதன்காரணமாக கடல்பாசி உயிர்ச்சத்தினை அதிகளவில் உற்பத்தி செய்யவும், அதன்மூலம் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் சுயதொழில் செய்து கொள்ளவும் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மீன்வளத்துறையின் சார்பில் மாவட்டத்தில் 1,500 மகளிரை கொண்ட சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டு அதில் 750 பேருக்கு கடல்பாசி உயிர்ச்சத்து பிரித்தெடுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு உயிர்ச்சத்தினை பிரித்தெடுக்கும் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மகளிருக்கு கடல்பாசி உற்பத்தி செய்ய மீனவர் கூட்டமைப்பு சார்பில் 60 சதவீத மானியம் வழங்குவதோடு மீதமுள்ள 40 சதவீத பங்குத்தொகையை செலுத்த முடியாத மகளிருக்கு கடன் உதவியும் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த மகளிர் குழுக்கள் உற்பத்தி செய்யும் கடல்பாசி இயற்கை உயிர்ச்சத்து உரத்தினை இந்திய அரசு உர நிறுவனம் மூலம் கொள்முதல் செய்து தேவைப்படும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல்கட்டமாக ராமேசுவரம் பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ள கடல்பாசி உயிர்ச்சத்து இயற்கை உரம் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு 100 லிட்டர் சோதனை முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வரும்காலங்களில் அதிகளவில் உற்பத்தி செய்து நிறுவனங்கள் கோரும் தேவைக்கு ஏற்ப சப்ளை செய்ய தயார் நிலையில் உள்ளது.
இதன்மூலம் மீனவ மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு அதிக லாபம் கிடைப்பதோடு சொந்தகாலில் நிற்க வழிவகை ஏற்படும் என்று மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story