மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 257 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்


மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 257 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்
x
தினத்தந்தி 26 July 2019 4:30 AM IST (Updated: 26 July 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 257 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

விருதுநகர், 

ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் சிவஞானம் தலைமை தாங்கினார். முகாமில் மொத்தம் 257 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவஞானம் வழங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

மக்களை தேடி அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் வருவதற்கு முக்கிய காரணம், அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும், அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த முகாம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அரசு திட்டத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அதை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். மக்கள் ஒவ்வொருவரும் எதற்்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது, யாரை நோக்கி செயல்படுத்தப்படுகிறது என்பனவற்றை நன்கு தெரிந்துகொண்டு, அவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு நாம் தகுதியானவர்களாக இருக்கும்பட்சத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு தேவைப்படுவதை நிர்வாகத்தால் செய்து தரமுடியும்.

ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சுகாதாரம் மிகவும் முக்கியம். பொதுமக்கள் தங்களது வீட்டையும், வீட்டைச்சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். அரசின் மூலம் தனிநபர் இல்லக்கழிப்பிடங்கள்், சமுதாய கழிப்பிடங்கள் கட்டி தரப்பட்டு வருகின்றன. அதனை பொதுமக்கள் முறையாக பயன்படுத்தி சுகாதாரத்தில் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக செயல்பட வேண்டும். நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் அரசின் மூலமாக மழைநீர் சேகரிப்பு, புராதன நீர் நிலைகள் மேம்பாடு, தீவிர மரங்கள் வளர்ப்பு, பண்ணைக்குட்டைகள் அமைத்தல் மற்றும் வரத்துக்கால்வாய்களில் தடுப்பணைகள் கட்டுதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தங்களது நிலங்கள் குறித்த விவரங்களை ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் கிராம நிர்வாக அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் கிராம கணக்கு பட்டியல் மூலமாகவோ அல்லது இ-அடங்கல், பட்டா உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் இணையதளத்தில் இ-அடங்கல் என்ற ஆன்ட்ராய்டு செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைதொடர்ந்து பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து செயல் விளக்க கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், சமூக நல அலுவலர் ராஜம், ராஜபாளையம் தாசில்தார் ஆனந்தராஜ் உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story