ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, நூல் விலை உயர்வு: அருப்புக்கோட்டையில் ரூ.50 கோடி சேலைகள் தேக்கம் ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை


ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, நூல் விலை உயர்வு: அருப்புக்கோட்டையில் ரூ.50 கோடி சேலைகள் தேக்கம் ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை
x
தினத்தந்தி 25 July 2019 10:15 PM GMT (Updated: 25 July 2019 9:11 PM GMT)

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மற்றும் நூல் விலை உயர்வால் ரூ.50 கோடி சேலைகள் தேக்கம் அடைந்துள்ளதால் அருப்புக்கோட்டையில் ஜவுளி வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் நெசவு தொழிலாளர்கள் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில வருடங்களாக கைத்தறி தொழிலில் போதுமான கூலி கிடைக்காததால் நெசவாளர்கள் படிப்படியாக விசைத்தறி நெசவு தொழிலுக்கு மாறினர். தற்போது 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்பட்ட சேலை ரகங்கள், விலை குறைவாகவும், தரமானதாகவும் இருப்பதால் ஆந்திரா, ஒடிசா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


மேலும் திரைப்படத்துறையினர் ஆர்வத்துடன் விரும்பி வாங்கி செல்கின்றனர். கடந்த 3 மாத காலமாக விசைத்தறி துணி உற்பத்திக்கு பயன்படுத்தும் பஞ்சு விலை உயர்ந்துள்ளதாலும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பாலும் நூல்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் டாலர் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் துணி உற்பத்தி சந்தையில் மந்தநிலை ஏற்பட்டது. இதனால் ரூ.240-க்கு அடக்கத்்தில் உற்பத்தி செய்யும் சேலையை ஜவுளி வியாபாரிகள் ரூ.220-க்கு கொள்முதல் செய்ய முன் வருகின்றனர்.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் சேலைகளை விற்பனை செய்ய முடியாமல் தேங்கி உள்ளன. உற்பத்தி செய்த சேலைகளை சேமித்து வைக்க இடமில்லாமல் உற்பத்தியாளர்கள் சேலை உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாகவே அருப்புக்கோட்டை பகுதியில் ரூ.50 கோடிக்கு மேல் உற்பத்தி செய்துள்ள சேலைகள் விற்க முடியாமல் மலை போல் தேங்கி கிடக்கின்றன. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தற்போது விருதுநகர் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்ட நூற்பாலைகள் பஞ்சு விலை உயர்வு, சிட்டா நூலுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியினாலும் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாததாலும், வங்கியில் வாங்கிய கடனை திருப்ப செலுத்த முடியாமலும் மூடப்பட்டுள்ளன.

இதுகுறித்து நெசவு தொழிற் சங்க முன்னாள் தலைவர் அறிவானந்தம் கூறும்போது, ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சேலைகள் விற்பனை குறைந்துள்ளது. விற்பனை மிகவும் குறைந்து விட்டதால் ஜி.எஸ்.டி. வரியை கூட கட்டமுடியாமல் வியாபாரிகள் கந்து வட்டிக்கு பணம் பெற்று கட்ட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. வங்கிகள் ரொக்க பரிவர்த்தனைக்கு கடும் நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் விதித்து உள்ளதால் ரொக்க விற்பனை சரிந்து உள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றார்.

Next Story