அரசியல் விவகாரத்தில் கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டினரா? மதுரையில் தி.மு.க. பெண் பிரமுகரிடம் தனிப்படை போலீசார் விசாரணை
நெல்லை முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் கொலையில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அரசியல் விவகாரத்தில் கூலிப்படையை ஏவி அவர்களை தீர்த்துக்கட்டினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை,
நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் உமா மகேசுவரி (வயது 62). இவர் நெல்லை மாவட்ட தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இவருடைய கணவர் முருகசங்கரன் (71). நெடுஞ்சாலைத்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களுடைய வீடு நெல்லை மேலப்பாளையத்தில் இருந்து ரெட்டியார்பட்டி செல்லும் ரோட்டில் அமைந்துள்ளது.
கடந்த 23-ந்தேதி கணவன், மனைவி வீட்டில் இருந்தபோது ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து அவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தனர். அப்போது வீட்டில் இருந்த மாரி என்ற பணிப்பெண்ணையும் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றனர்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. எனவே, நகைக்காக கொலை நடந்து இருக்கலாம் என்று போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இருந்தபோதிலும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. 50-க்கும் மேற்பட்டோரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரித்தனர்.
உமா மகேசுவரி வீடு அமைந்திருக்கும் பகுதியில் நிறுவப்பட்டுள்ள செல்போன் கோபுரங்களில் குறிப்பிட்ட நேரத்தில் இணைப்பு பெற்றிருந்த செல்போன் எண்களை எடுத்து அவற்றின் உரிமையாளர்கள் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அந்த பகுதியில் வேலை செய்து வந்த வடமாநிலத்தவரை பிடித்து விசாரித்தபோது எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதனால் போலீசார் மற்றொரு கோணத்தில் தங்களது விசாரணையை முடுக்கினர்.
இதில் திடுக்கிடும் திருப்பமாக, அரசியல் விவகாரத்தில் கூலிப்படையை ஏவி இந்த கொலைகள் அரங்கேற்றப்பட்டு இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
அதன்பேரில், தனிப் படையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று மதுரைக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு முகாமிட்டு மதுரை போலீசாரின் உதவியுடன் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் நெல்லையை சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகர் ஒருவர் மதுரையில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு வந்திருந்ததை அறிந்து, அந்த வீட்டுக்கு அதிரடியாக சென்று விசாரணை நடத்தியது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த தி.மு.க. பெண் பிரமுகரும், கொலை செய்யப்பட்ட உமா மகேசுவரியும் ஆரம்பத்தில் ஒன்றாக அரசியல் செய்து வந்தவர்கள். நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆரம்பத்தில் இருவரும் முயற்சித்து உள்ளனர். ஆனால், உமா மகேசுவரிக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து அரசியலில் அவரது கை ஓங்கியது. அந்த பெண் பிரமுகர், தனக்கு எப்படியாவது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருமாறு உமா மகேசுவரியிடம் கேட்டு வந்திருக்கிறார். அவரும் முயற்சி செய்வதாக கூறி இருக்கிறார்.
இதுதொடர்பாக பெரும்தொகை கைமாறியதாகவும், சொன்னபடி சீட் வாங்கி தராததாலும், பணத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாலும் ஆத்திரம் அடைந்த அந்த பெண் பிரமுகர், கூலிப்படையை ஏவி உமா மகேசுவரி, அவருடைய கணவர் உள்பட 3 பேரை தீர்த்துக்கட்டினரா? என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீஸ் வட்டாரத்தினர் கூறியதாவது:-
கொலை செய்யப்பட்ட உமா மகேசுவரிக்கு என்னென்ன பிரச்சினைகள், விரோதங்கள் இருந்தன? என்பது தொடர்பான தகவல் களை திரட்டி வருகிறோம். அந்த வகையில் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக கூறி, நெல்லையை சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகரிடம் பணம் கைமாறி இருப்பது தொடர்பான சில தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன.
அவ்வாறு பணம் கொடுத்த அந்த பெண், கொலை நடந்த அன்று நெல்லையில் இல்லை. அவர் மதுரை கூடல்புதூரில் உள்ள தன்னுடைய மகள் வீட்டுக்கு வந்துள்ளார். எனவே, அவரை விசாரிக்க முடிவு செய்து வந்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அதன்பின்னரே முடிவுக்கு வரமுடியும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுதவிர நெல்லையை சேர்ந்த மற்றொரு தி.மு.க. பிரமுகரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதாகவும் தெரியவருகிறது.
முன்னாள் மேயரான உமா மகேசுவரி கடந்த 2011-ம் ஆண்டு சங்கரன்கோவில் சட்டசபை தொகுதியில் (தனி) போட்டியிட்டார். அதன்பிறகு நடந்த இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. ஆனால் கட்சி தலைமைக்கு உமா மகேசுவரி மற்றும் முருகசங்கரன் ஆகியோர் மிகவும் நெருக்கமாக இருந்தனர். இதையொட்டி கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதே அந்த தி.மு.க. பெண் பிரமுகரிடம், சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக கூறி உமா மகேசுவரி பணம் பெற்றார் என கூறப்படுகிறது. ஆனால் அந்த தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. எனவே, நாடாளுமன்ற தேர்தலின் போது தென்காசி தொகுதியில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக கூறி அந்த பெண் பிரமுகரை சமரசம் செய்துவிட்டு, பணத்தை உமா மகேசுவரி வைத்துக்கொண்டார் எனவும் தகவல்கள் வெளியாகின.
இதில் ஆத்திரமடைந்த அந்த பெண் பிரமுகர் கூலிப்படையை ஏவி இந்த கொலைகளை அரங்கேற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது உண்மையா? என போலீசாரிடம் உறுதிப்படுத்த முயன்றபோது, அவர்கள் அதுதொடர்பான தகவல் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டனர். 3 பேர் கொலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதால் நெல்லையில் மேலும் பரபரப்பு நிலவி வருகிறது.
Related Tags :
Next Story