கடையம் அருகே பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கடையம் அருகே பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடையம்,
கடையம் அருகே உள்ள பாப்பான்குளத்தை அடுத்த மயிலப்புரம் நடுத்தெருவை சேர்ந்தவர் காலசாமி (வயது 40). இவருடைய மகன் மாரிசெல்வம் (16). இவர் பள்ளக்கால் புதுக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாரிசெல்வம் தான் படித்த அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்று 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை வாங்கினார்.
பின்னர் வீட்டுக்கு வந்த அவர் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட போவதாக கூறி உள்ளார். அதற்கு அவருடைய பெற்றோர், பள்ளிக்கு சென்று மதிப்பெண் சான்றிதழை கொடு என்று கூறி உள்ளனர்.
இதனால் மனமுடைந்த மாரிசெல்வம் புத்தக பையை எடுத்துக்கொண்டு சைக்கிளில் புறப்பட்டு சென்று உள்ளார். ஆனால் அன்று மாலை வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், மாரிசெல்வத்தை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை ஊருக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் மரத்தில் மாரிசெல்வம் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாரிசெல்வத்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், மாரிசெல்வம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து மாரிசெல்வத்தின் உடலை பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story