பர்கூர் அருகே மதுபானங்கள் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்தது ரூ.17 லட்சம் பாட்டில்கள் உடைந்து நாசம்


பர்கூர் அருகே மதுபானங்கள் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்தது ரூ.17 லட்சம் பாட்டில்கள் உடைந்து நாசம்
x
தினத்தந்தி 25 July 2019 10:45 PM GMT (Updated: 25 July 2019 9:37 PM GMT)

பர்கூர் அருகே டாஸ்மாக் கடைக்கு மதுபானங்கள் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ரூ.17 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைந்து நாசமானது.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பையனப்பள்ளி டாஸ்மாக் குடோனில் இருந்து நேற்று, சிங்காரப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபானங்களை ஏற்றிக் கொண்டு மினி லாரி புறப்பட்டது. இந்த மினி லாரியை கிருஷ்ணகிரியை சேர்ந்த வரதராஜ் (வயது 24) என்பவர் ஓட்டிச் சென்றார்.

அவருடன் உதவியாளர்களாக கிருஷ்ணகிரியை சேர்ந்த நாகராஜ்(24), சுபாஷ்(23) ஆகியோர் சென்றனர். பர்கூர் அருகே கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் ஜெகதேவி தர்கா பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த ரூ.17 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைந்து நாசமானது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தில் டிரைவர் வரதராஜ், நாகராஜ், சுபாஷ் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். விபத்து தொடர்பாக தகவலறிந்த, பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக அந்த சாலையின் வழியே சென்ற அனைத்து வாகனங்களும் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது.

இதனால் கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story