தந்தை இறந்த நிலையில் தாயையும் இழந்தனர்: கொலையான பணிப்பெண்ணின் 3 மகள்கள் பரிதவிப்பு அரசு உதவிக்கு எதிர்பார்ப்பு


தந்தை இறந்த நிலையில் தாயையும் இழந்தனர்: கொலையான பணிப்பெண்ணின் 3 மகள்கள் பரிதவிப்பு அரசு உதவிக்கு எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 26 July 2019 4:45 AM IST (Updated: 26 July 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் தந்தை இறந்த நிலையில் தாயும் கொலை செய்யப்பட்டதால், அவருடைய 3 மகள்கள் பரிதவித்து வருகின்றனர். அவர்கள் அரசு உதவிக்கு எதிர்பார்த்து உள்ளனர்.

நெல்லை, 

நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன் ஆகியோருடன் பணிப்பெண் மாரியும் (வயது 38) நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். மாரியின் கணவர் முருகக்கனி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு வீரலட்சுமி (17), ஜோதிலட்சுமி (15), ராஜேசுவரி (13) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் முறையே பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2, 10-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர். முருகக்கனி இறந்த பிறகு மாரியும், அவருடைய தாய் வசந்தாவும் வீட்டு வேலைகள் செய்து, அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் 3 குழந்தைகளை வளர்த்து படிக்கவும் வைத்தனர். இந்த நிலையில் மாரியும் இறந்து விட்டதால் 3 மகள்களும் பெற்றோரை இழந்து பரிதவித்து வருகின்றனர். பாட்டி வசந்தாவின் பராமரிப்பில் தற்போது இருக்கும் நிலையில் தங்களது எதிர்காலத்தை நினைத்து அவர்கள் கவலை அடைந்து உள்ளனர். தாய், தந்தையை இழந்த மகள்களுக்கு ஒருசிலர் ஆதரவு கரம் நீட்டினாலும் அவர்கள் அரசின் உதவியை எதிர்பார்த்து உள்ளனர்.

இவர்கள் வீடு இல்லாமல் அமுதா பீட் நகரில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு வசித்து வருகிறார்கள். மாரி சொந்த வீடு கட்டி தனது மகள்கள் மற்றும் தாயுடன் அந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக தாங்கள் வசித்த வீட்டுக்கு அருகில் மிக குறுகிய நிலம் ஒன்றை வாங்கி அதில் வீடு கட்டும் பணியை தொடங்கி இருந்தார். அஸ்திவாரம் மட்டுமே போடப்பட்டு உள்ள நிலையில் அந்த வீடு உள்ளது. தற்போது அவர் கொலை செய்யப்பட்டதால் வீட்டை எப்படி கட்டி முடிப்பது என்று அவருடைய தாரும், மகள்களும் கலங்கி நிற்கிறார்கள். எனவே பசுமை வீடு, பிரதமர் வீடு கட்டும் திட்டம் என மத்திய, மாநில அரசு திட்டங்களில் ஏதேனும் ஒன்றின் மூலம் அந்த வீட்டை தொடர்ந்து இலவசமாக கட்டிக்கொடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாரியின் தாய் வசந்தா மற்றும் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story