அம்பையில் கடையில் நகை மோசடி செய்த இளம்பெண் கைது


அம்பையில் கடையில் நகை மோசடி செய்த இளம்பெண் கைது
x
தினத்தந்தி 25 July 2019 10:30 PM GMT (Updated: 25 July 2019 10:14 PM GMT)

அம்பையில் உள்ள நகைக்கடையில் கவரிங் நகையை கொடுத்து புதிய நகை வாங்கி மோசடி செய்த இளம்பெண் நேற்று கைது செய்யப்பட்டார்.

அம்பை, 

அம்பை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ஷேக் பர்தீன். இவர் அம்பை சந்தை பஜாரில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு கடந்த மே மாதம் 1-ந் தேதி ஒரு பெண் வந்தார். அவர் 33 கிராம் பழைய தங்க நகையும், பணமும் கொடுத்து, 31 கிராம் புதிய தங்க நகையை வாங்கி சென்றார். அந்த பெண் சென்ற பின்னர் ஷேக் பர்தீன் அந்த நகையை பரிசோதனை செய்தார். அப்போது அந்த நகைகள் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது.

இதில் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து அம்பை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடி செய்த பெண் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் நெல்லை மாவட்டம் பேட்டையில் சேரன்மாதேவி ரோட்டை சேர்ந்த முகமது மீரான் மனைவி ஆயிஷா (வயது 30) இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோன்று வேறு எங்கும் அவர் நகை மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story