மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; கல்லூரி பேராசிரியர் சாவு


மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; கல்லூரி பேராசிரியர் சாவு
x
தினத்தந்தி 26 July 2019 4:15 AM IST (Updated: 26 July 2019 3:49 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிக்கொண்டதில் கல்லூரி பேராசிரியர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் தாத்தா, பேத்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே உள்ள டி.ஜி.புதூர் நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் மல்லையன். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுடைய மகன் யுவராஜ் (வயது 29). திருமணம் ஆகாதவர். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று யுவராஜ் டி.ஜி.புதூரில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

சத்தியமங்கலம் மேட்டூர் பிரிவு பகுதியில் சென்றபோது சத்தியமங்கலத்தை சேர்ந்த வெள்ளியங்கிரி (67) என்பவர் அவருடைய பேத்தி காவ்யாவுடன் (3) ஒரு மொபட்டில் வந்து கொண்டு இருந்தார். இதில் யுவராஜ் சென்ற மோட்டார் சைக்கிளும், மொபட்டும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் 3 பேரும் தூக்கிவீசப்பட்டனர். இதில், யுவராஜ் தலையில் படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, விபத்தில் இறந்த யுவராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த காவ்யா, வெள்ளியங்கிரியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் இறந்த யுவராஜியின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story