கோபி, வெள்ளோடு பகுதியில் கைவரிசை பிரபல கொள்ளையர்கள் 2 பேர் கைது


கோபி, வெள்ளோடு பகுதியில் கைவரிசை பிரபல கொள்ளையர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 July 2019 3:15 AM IST (Updated: 26 July 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

கோபி, வெள்ளோடு பகுதியில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மடிக்கணினி, செல்போன், மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னிமலை, 

வெள்ளோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் நேற்று பெருந்துறை ஆர்.எஸ். பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் மோட்டார்சைக்கிளை திருப்பிக்கொண்டு அங்கிருந்து செல்ல முயற்சித்தனர்.

உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவர் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள சடையம்பாளையத்தை சேர்ந்த பிலவேந்திரன் மகன் பெரியநாயகம் (வயது 32) என்றும், பின்னால் அமர்ந்து இருந்தவர் அதே ஊரை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் சங்கர் (வயது 30) என்பதும் தெரிய வந்தது.

இவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் டேங்க் கவரை போலீசார் சோதனை செய்த போது அதற்குள் மடிக்கணினி மற்றும் இரும்பு கம்பி ஆகியவை இருந்துள்ளது. அதைத்தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் 2 பேரும் வந்த மோட்டார் சைக்கிள் கோபிசெட்டிபாளையம் அருகே பொம்மநாய்க்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருடப்பட்டது என்பதும், அவர்கள் வைத்திருந்த மடிக்கணினி கடந்த ஜனவரி மாதம் வெள்ளோடு அருகே தண்ணீர்பந்தலில் உள்ள விவசாயி கெட்டிமுத்து என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து திருடியதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து வெள்ளோடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். கைதான 2 பேரும் வேறு எங்கெல்லாம் திருடியுள்ளனர் என்பதை கண்டறிய போலீசார் அவர்களிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். 2 பேரும் போலீசாரிடம் கூறியதாவது:-

நாங்கள் 2 பேரும் சித்தோடு அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தோம். அப்போது எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. வேலையில் வருமானம் போதுமானதாக இல்லை. மேலும் எங்களுக்கு குடிப்பழக்கம் உண்டு. அதனால் தனியாக உள்ள வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டோம். எங்கள் மீது ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டில் போடப்பட்ட திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று விட்டு ஜாமீனில் வெளிவந்தோம்.

அதன்பிறகு 2018-ம் ஆண்டில் கச்சுப்பள்ளி எட்டிக்குட்டைமேட்டில் உள்ள ஒரு வீட்டில் நகையை திருடினோம். தொடர்ந்து சென்னிமலைக்கு வேலைக்கு சென்றால் நிறைய வருமானம் கிடைக்கும் என நம்பி கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி அன்று சென்னிமலைக்கு பஸ்சில் சென்றோம். அப்போது வெள்ளோட்டை அடுத்த தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் ஒதுக்குபுறமாக வீடு ஒன்று இருந்ததை பார்த்து பஸ்சை விட்டு இறங்கி அந்த வீட்டுக்கு சென்றோம். ஆள் இல்லாத அந்த வீட்டின் பூட்டை உடைத்து மடிக்கணினி, செல்போன், பணம் மற்றும் நகைகளை திருடினோம்.

அதன்பின்னர் ஒரு திருட்டு வழக்கில் மகுடஞ்சாவடி போலீசார் எங்களை கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் இருந்து சமீபத்தில் தான் நாங்கள் ஜாமீனில் வெளி வந்தோம். தற்போது மடிக்கணினி, செல்போனை விற்பதற்காகவும், மீண்டும் தனியாக உள்ள வீட்டில் திருடலாம் என திட்டம் போட்டும் நாங்கள் 2 பேரும் சென்னிமலையை நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்தோம். அப்போது எங்களை போலீசார் பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து மடிக்கணினி, செல்போன், திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பி மற்றும் மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதான 2 பேரையும் பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். இவர்கள் 2 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

Next Story