போக்குவரத்து விதிமீறிய 15 வாகனங்கள் பறிமுதல்
புஞ்சைபுளியம்பட்டி, பெருந்துறை பகுதியில் நடந்த வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு,
புஞ்சைபுளியம்பட்டி நால்ரோட்டில் சத்தியமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமா பிரியா தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி 2 தனியார் கல்லூரி பஸ்கள் இயங்கியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த 2 பஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தகுதிச்சான்றுகள் இல்லாமல் இயங்கிய 6 ஆட்டோக்கள் உள்பட 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கல்லூரி பஸ்கள் உள்பட 11 வாகனங்களும் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதேபோல் 6 வாகனங்களில் இருந்து அதிகஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டன. இதுகுறித்து சத்தியமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமா பிரியா கூறுகையில், ‘பறிமுதல் செய்யப்பட்ட 11 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி மற்றும் ஆய்வாளர்கள் கண்ணன், சுகந்தி ஆகியோர் 2 நாட்கள் ஈரோடு திண்டல் மற்றும் பெருந்துறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது தனியார் பள்ளிக்கு சொந்தமான ஆம்னி வேன் ஒன்று வேகமாக வந்தது. இதனை கவனித்த அதிகாரிகள் அந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 10 மாணவ-மாணவிகள் இருந்தனர். மேலும் அந்த ஆம்னி வேன் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கியதோடு, ஆம்னி வேனை ஓட்டி வந்த டிரைவரும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் ஈரோட்டில் இருந்து பயணிகள் ஆட்டோ ஒன்று பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்தது. அந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் ஆட்டோவுக்கு தகுதி சான்று இல்லாமலும், டிரைவர் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதவிர, பெருந்துறை பகுதியில் நடந்த வாகன சோதனையில் சென்னிமலை கே.ஜி.வலசு பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவருக்கு சொந்தமான ஆம்னி வேன் ஒன்றும், குடிநீர் கேன்களை ஏற்றியபடி வந்த சரக்கு ஆட்டோவும் போக்குவரத்து விதிகளை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 4 வாகனங்களும் பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி கூறுகையில், ‘போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும். மேலும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டி, விபத்துகளை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
Related Tags :
Next Story