தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீடு, சர்க்கரை ஆலையில் வருமான வரித்துறை சோதனை
கோலாப்பூரில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீடு, சர்க்கரை ஆலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
புனே,
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஹசன் முசரப். இவர் கோலாப்பூரில் உள்ள காகல் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். இவருக்கு கோலாப்பூர் மாவட்டத்தில் சர்க்கரை ஆலை மற்றும் வீடு உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை 7 மணியளவில் எம்.எல்.ஏ. ஹசன் முசரப்பின் சர்க்கரை ஆலை மற்றும் வீட்டில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் அருகில் வசித்து வரும் அவரது சகோதரர் வீட்டிலும் சோதனை போட்டனர்.
இந்த சோதனையில் சர்க்கரை ஆலை கணக்கு வழக்குகளில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாகவும், சோதனை தொடர்ந்து நடந்து வருவதாகவும் டெல்லியை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சோதனைக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், அரசு வருமான வரித்துறையை தவறாக பயன்படுத்துகிறது. இது எதிர்க்கட்சியினரை துன்புறுத்துவதற்கான முயற்சியே அன்றி வேறு எதுவும் இல்லை. இதன் மூலம் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள், என்றார்.
ஹசன் முசரப் எம்.எல்.ஏ. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story