தம்மம்பட்டி, ஓமலூர் பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
தம்மம்பட்டி, ஓமலூர் பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தம்மம்பட்டி,
தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. தற்போது வறட்சி காரணமாக பேரூராட்சி பகுதியில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு விட்டன. நரசிங்கபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தம்மம்பட்டி பேரூராட்சி பகுதிக்கு தினமும் 18 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் 5 லட்சம் முதல் 7 லட்சம் லிட்டர் வரை மட்டுமே குடிநீர் தம்மம்பட்டி பேரூராட்சிக்கு வினியோகிக்கப்படுகிறது. இந்த குடிநீரை வைத்து தம்மம்பட்டி பகுதியில் இருக்கும் 18 வார்டுகளுக்கும் பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். மேலும் தண்ணீர் அளவு குறைவாக உள்ளதால் அனைத்து வார்டுகளிலும் முறையாக குடிநீர் வழங்க முடியாமல் பேரூராட்சி நிர்வாகம் தத்தளித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இதனிடையே தம்மம்பட்டி பேரூராட்சி 2-வது வார்டு பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு, அந்த பகுதியில் தம்மம்பட்டி-கெங்கவல்லி ரோட்டில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர் அப்போது தகவல் அறிந்து வந்த தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதிகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வருகிறது. அதுவும் குறைந்த அளவே வருகிறது. மேலும் எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்று கூறினர். இதுகுறித்து செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி நாளை (இன்று) காலையில் குடிநீர் வழங்கப்படும் என்றும், ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக நேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி கூறுகையில், தம்மம்பட்டி பகுதியில் தற்போது குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 6 ஆழ்துளை கிணறுகள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 3 ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டுள்ளன. மீதமுள்ள 3 ஆழ்துளைக்கிணற்றுடன், 2-வது வார்டு பகுதி மக்கள் கேட்டுக்கொண்ட கோரிக்கையை ஏற்று 4 ஆழ்துளைக்கிணறுகள் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஓமலூர் அருகே உள்ளது சர்க்கரை செட்டிப்பட்டி கிராமம். இங்குள்ள புதுக்கடை காலனி பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியில் வசிக்கும் சுமார் 50 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறார்கள். இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்துக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் குடிநீர் வழங்காததை கண்டித்து நேற்று காலை ஓமலூரில் இருந்து தின்னப்பட்டி செல்லும் சாலையில் புதுக்கடை அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊராட்சி மன்ற செயலாளர் சின்னுசாமி மற்றும் ஓமலூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, புதுக்கடை காலனி பகுதிக்கு முறையாக தண்ணீர் வழங்குவதாக உறுதி அளித்தனர். இதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சிறைபிடித்த அரசு பஸ்சை விடுவித்தனர். இதனால் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story