10 ஆயிரம் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு கலெக்டர் ராமன் தகவல்
சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரம் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் கொண்டலாம்பட்டியை அடுத்த உத்தமசோழபுரத்தில் செயல்படும் சேலம் வேளாண் விற்பனை குழு அலுவலக வளாகத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடம் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வது குறித்து மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், விவசாயிகள் மத்தியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வது தொடர்பாக விளக்கம் அளித்து பேசினார். இதைத்தொடர்ந்து கலெக்டர் ராமன் கூறியதாவது:-
தமிழகத்தில் கொப்பரை தேங்காய்களின் விலை குறைந்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில், விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. சேலம் மாவட்டத்தில் 11,897 எக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து 1,764 லட்சம் தேங்காய்கள் உற்பத்தியாகின்றன. இதிலிருந்து சுமார் 29,500 டன் கொப்பரை தேங்காய் கிடைக்கிறது. வேளாண் உற்பத்தியை பெருக்கி விவசாய பெருமக்களின் விளை பொருளுக்குரிய விலை கிடைத்திடவும், அவர்களின் வருமானத்தை உயர்த்துவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 2019-2020-ம் ஆண்டில் தென்னை விவசாயிகள் உற்பத்தி செய்த கொப்பரை தேங்காயை மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பந்து கொப்பரை மற்றும் அரவை கொப்பரை என 2 வகைகளாக கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும்.
2019-ம் ஆண்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பந்து கொப்பரையின் குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோ ஒன்றிற்கு ரூ.99.20 மற்றும் அரவை கொப்பரையின் குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோ ஒன்றிற்கு ரூ.95.21 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும் என அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 10 ஆயிரம் டன் கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம், வாழப்பாடி மற்றும் மேச்சேரி ஆகிய ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் தேர்வு செய்யப்பட்டு, இவை வார வேலை நாட்களில் முதன்மை கொள்முதல் முகமைகளாக செயல்படும்.
சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களுடன் சேலம், வாழப்பாடி மற்றும் மேச்சேரியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் கொப்பரை தேங்காய் கொள்முதல் பணி, அடுத்த 6 மாதங்கள் தொடர்ந்து நடைபெறும். விவசாயிகளுக்குரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும். விவசாயிகளின் விளை பொருளுக்கு நல்ல லாபகரமான விலை கிடைக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சியில் விவசாயிகள் முழுமையாக பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு கலெக்டர் ராமன் கூறினார்.
இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர் கமலா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செல்லதுரை, வேளாண் விற்பனை வணிக மைய செயலாளர் மாதவன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story