தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலைக்கு முயன்ற மாணவி ரெயில் வந்ததும் ஓட்டம்


தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலைக்கு முயன்ற மாணவி ரெயில் வந்ததும் ஓட்டம்
x
தினத்தந்தி 26 July 2019 4:44 AM IST (Updated: 26 July 2019 4:44 AM IST)
t-max-icont-min-icon

தற்கொலைக்கு முயன்ற மாணவி, ரெயில் வந்ததும் ஓட்டம் பிடித்தார். ஆனாலும் ரெயில் மோதியதில் அவர் காயத்துடன் உயிர் தப்பினார்.

போத்தனூர்,

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுடைய மகள் ஜெயசூர்யா (வயது18). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் பிரிந்து சென்று விட்டதால் பழனியம்மாள் கூலி வேலைக்கு சென்று தனது மகளை படிக்க வைத்து வந்தார். தாய் கஷ்டப்பட்டு கூலி வேலை பார்த்ததால் மாணவி ஜெயசூர்யா மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஜெயசூர்யா தற்கொலை செய்யமுடிவு செய்தார். அதன்படி நேற்று காலை விடுதியை விட்டு வெளியேறி, கல்லூரியின் பின்புறத்தில் ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். அப்போது அந்த வழியாக ரெயில் வேகமாக வந்து கொண்டு இருந்தது.

ரெயில் அருகே நெருங்கி வந்ததை பார்த்ததும் ஜெயசூர்யாவுக்கு திடீரென்று பயம் ஏற்பட்டது. உடனே அவர் சுதாரித்துக் கொண்டு தண்டவாளத்தை விட்டு எழுந்து ஓட முயன்றார். ஆனால் அதற்குள் ரெயில் ஜெயசூர்யா மீது மோதி விட்டு வேகமாக சென்றது.

இதனால் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஜெயசூர்யாவை உடனடியாக மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து போத்தனூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story