இந்த மாதத்திற்குள் புதிய அரசு அமையாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் - சபாநாயகர் ரமேஷ்குமார் பேட்டி
இந்த மாதத்திற்குள் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு கடந்த 23-ந் தேதி கவிழ்ந்தது. அடுத்த நாளே, பா.ஜனதா அரசு அமையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு புதிய அரசு அமையவில்லை. ஆட்சி அமைக்கும் விஷயத்தில் அமைதி காக்கும்படி கர்நாடக பா.ஜனதா தலைவர்களுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் சபாநாயகர் ரமேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சட்டசபையில் நிதி மசோதாவுக்கு அவசரமாக ஒப்புதல் பெற வேண்டும். இந்த மாத இறுதிக்குள் புதிய அரசு அமையாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும், பல்வேறு திட்டப் பணிகளுக்கும் நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும். அதனால் எந்த அரசு அமைந்தாலும், முதலில் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெற வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளேன். கர்நாடக வரலாற்றில் அரசியலமைப்பு சட்ட சிக்கல் ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இத்தகைய தவிர்க்க முடியாத நிலை வந்திருப்பது வருந்தத்தக்கது. விதிமுறைகளின்படி ராஜினாமா கொடுத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். அவர்களுக்கு நோட்டீசு அனுப்பி ஆஜராகும்படி உத்தரவிட்டேன். அவர்கள் விசாரணைக்கு வரவில்லை. மீண்டும், மீண்டும் நோட்டீசு அனுப்பி அவர்களை அழைக்க எனக்கு வேறு வேலை இல்லையா?.
விசாரணையை முடித்துவிட்டேன். அதனால் மீண்டும் அவர்களுக்கு நோட்டீசு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விஷயத்தில் எத்தகைய முடிவையும் எடுக்கும் அதிகாரத்தை சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் எனது பணியை நிர்வகிப்பேன்.
இவ்வாறு ரமேஷ்குமார் கூறினார்.
Related Tags :
Next Story