வேலூர் அருகே இரும்புக்கம்பியால் பெண் அடித்துக்கொலை கழிவுநீர் தொட்டியில் உடல் மீட்பு


வேலூர் அருகே இரும்புக்கம்பியால் பெண் அடித்துக்கொலை கழிவுநீர் தொட்டியில் உடல் மீட்பு
x
தினத்தந்தி 25 July 2019 10:00 PM GMT (Updated: 25 July 2019 11:51 PM GMT)

இரும்புக்கம்பியால் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழிவுநீர் தொட்டியில் உடல் மீட்கப்பட்டுள்ளது.

வேலூர்,

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூரை அடுத்த மேட்டு இடையம்பட்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. லாரி டிரைவர். இவருடைய மனைவி சுலோச்சனா (வயது 45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் காலையில் மருத்துவமனைக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு வீட்டை விட்டு சென்றார். அதன் பின்பு அவர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். எனினும் அவரை பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று பிற்பகலில் பாகாயம் போலீசில் சுலோச்சனாவின் உறவினரான சுரேஷ் என்பவர் சரண் அடைந்தார். சுலோச்சனாவை கொலை செய்து ஓட்டேரியில் உள்ள அரசு முத்துரங்கம் கல்லூரி அருகே உள்ள ஒரு வீட்டின் தரைமட்ட கழிவுநீர் தொட்டியில் பிணத்தை போட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், சுரேசை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர் காண்பித்த தொட்டியில் இருந்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுலோச்சனா உடலை போலீசார் மீட்டனர். இதையடுத்து உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:-

கிருஷ்ணமூர்த்தியின் உறவினரான திருச்சியை சேர்ந்த சுரேஷ் மேட்டுஇடையம்பட்டியில் வசித்து வந்துள்ளார். அப்போது சுலோச்சனாவுக்கும், சுரேசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியதாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சுலோச்சனாவை சுரேஷ் இரும்புக்கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் கை, கால்களை கயிற்றால் கட்டி ஒரு வீட்டின் தரைமட்ட கழிவுநீர் தொட்டியினுள் உடலை போட்டுள்ளார். இது குறித்து மேல்விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

ஏற்கனவே பாகாயம் பகுதியில் ஜெயந்தி என்ற பெண்ணை நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே கட்டையால் அடித்துக்கொன்றார். (இது பற்றிய செய்தி 13-ம் பக்கம்) இந்த நிலையில் மேலும் ஒரு சம்பவமாக சுலோச்சனா என்ற பெண்ணையும் அவரது உறவினர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story