வங்கியை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் தி.க.வினர் கைது போலீசார் தடியடி- பரபரப்பு


வங்கியை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் தி.க.வினர் கைது போலீசார் தடியடி- பரபரப்பு
x
தினத்தந்தி 26 July 2019 5:53 AM IST (Updated: 26 July 2019 5:53 AM IST)
t-max-icont-min-icon

வங்கியை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். அப்போது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர் பணிக்கான தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் எஸ்.டி. பிரிவினருக்கான கட்-ஆப் மதிப்பெண் 53.75 சதவீதமாக உள்ள நிலையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பொது வகுப்பினருக்கான கட்-ஆப் மதிப்பெண் 28.5 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள புதுவை சுய்ப்ரேன் வீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி வங்கி அருகே நேற்று கூடினார்கள்.

இதைத்தொடர்ந்து அங்கு பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வங்கி பகுதியில் தடுப்பு கட்டைகளையும் அமைத்திருந்தனர்.

இந்தநிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாநில தலைவர் வீர.மோகன் தலைமையில் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது சிலர் மோடியின் உருவபொம்மையை அங்கு கொண்டு வந்து தீவைத்து கொளுத்த முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் உருவ பொம்மையை பறித்துச் சென்றனர்.

இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புக் கட்டையை தள்ளிக்கொண்டு வங்கியை நோக்கி செல்ல முயன்றனர். இதை தடுக்க முயன்ற போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை லேசான தடியடி நடத்தி போலீசார் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட துணைத்தலைவர் இளங்கோ, செயலாளர் சுரேஷ், பொருளாளர் பெருமாள், இளைஞர் அணி தலைவர் சிவமுருகன், தொழிற்சங்க தலைவர் ஜெகன், அரியாங்குப்பம் தொகுதி தலைவர் பாஸ்கர், மணவெளி தொகுதி தலைவர் கிருஷ்ணன் உள்பட 31 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டு சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story