ரெயில் பயணிகளிடம் நகை, பணம் திருடிய வழக்கில் புழல் சிறையில் இருந்த கேரள வாலிபர் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்
ரெயில் பயணிகளிடம் நகை, பணத்தை திருடிய வழக்கில் புழல் சிறையில் இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த வாலிபர் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் இருந்து 12½ பவுன் நகை, ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை,
ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், சேலம் ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுரேஷ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ஏட்டுகள் முரளிமனோகர், சுப்பிரமணி மற்றும் போலீசார் ஓடும் ரெயில்களில் பயணிகளிடம் நகை திருடும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சென்னை புழல் சிறையில் உள்ள கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த காதர் மகன் அமீது (வயது 30) என்பவரை கடந்த 23-ந் தேதி ஜோலார்பேட்டைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஈரோடு பகுதியை சேர்ந்த பெரியசாமி (50) என்பவரிடம் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த ஜனவரி மாதம் ரூ.10 லட்சம், கடந்த ஆண்டு பெங்களூருவை சேர்ந்த ஜெகதீஷ்பாபு (45) என்பவரிடம் 285 கிராம் நகை, ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சிட்டிபாபு மனைவி அர்ச்சனா (42) என்பவரிடம் 164 கிராம் நகை திருடியதை ஒப்புக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் அமீதை கேரள மாநிலத்திற்கு அழைத்து சென்று, அவரிடம் இருந்து 12½ பவுன் நகை, ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர், திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story