தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட 3 சகோதரர்கள் குடும்பத்திற்கு புதிய வீடு கட்டுமான பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
கலசபாக்கம் அருகே தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட 3 சகோதரர்கள் குடும்பத்திற்கு புதிய வீடு கட்டுவதற்கான பணியை கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.
கலசபாக்கம்,
கலசபாக்கம் தாலுகா காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45). இவரது மனைவி ஜெயசாந்தி (38). இவர்களுக்கு சிவக்குமார் (18), செல்வம் (16), நந்தகோபால் (13) என 3 மகன்கள் உள்ளனர். ஏழுமலையும், ஜெயசாந்தியும் தங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
இவர்களது மகன்களான சிவக்குமார் 7-ம் வகுப்பு படிக்கும் போதும், செல்வம் 6-ம் வகுப்பு படிக்கும் போதும், நந்தகோபால் 5-ம் வகுப்பு படிக்கும் போதும் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் வீட்டிலேயே உட்கார்ந்த நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்கள் 3 பேருக்கும் அரசு மூலம் மாற்றுத் திறனாளிகளுக்காக வழங்கப்படும் மாதம் தலா ரூ.1,500 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் 3 பேருக்கும் சக்கர நாற்காலி வழங்கினார்.
அதைத்தொடந்து கலெக்டர் கந்தசாமி அந்த 3 பேரின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்கள் வசித்து வரும் பழைய வீட்டிற்கு பதிலாக அவர்களுக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்தார். மேலும் அவர்களின் குடும்ப வருமானத்திற்காக 2 கறவை பசுக்கள் மற்றும் 2 கன்று குட்டிகளை வழங்கினார். இதுமட்டுமின்றி 3 சகோதரர்களுக்கும் தனித்தனியாக நீர் படுக்கையுடன் கூடிய புதிய கட்டிலும் வழங்கினார்.
மேலும் 3 சகோதரர்களும் வீட்டில் 3 சக்கர நாற்காலியில் உட்காந்து இருப்பதை உணர்ந்து, உடனடியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக வழங்கப்படும் பேட்டரியினால் இயக்கப்படும் சக்கர நாற்காலியை வரவழைத்து அவர்களுக்கு வழங்கினார்.
அப்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story