ஊத்தங்கரையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது


ஊத்தங்கரையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 July 2019 4:00 AM IST (Updated: 26 July 2019 11:32 PM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அவ்வைநகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 34). இவர் சம்பவத்தன்று ஊத்தங்கரையில் சேலம்-அரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இது குறித்து அவர் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், நகையை பறித்து சென்ற மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நகையை திருடியது வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆதிமூலம் தெருவை சேர்ந்த சுரேஷ்(32), குடியாத்தம் கோடிபேட் பகுதியை சேர்ந்த தேவிபிரசாத்(28) ஆகியோர் என தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், அவர்கள் மீது ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சுரேஷ், தேவிபிரசாத் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

Next Story