உத்தனப்பள்ளி அருகே சாலைமறியலில் ஈடுபட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு


உத்தனப்பள்ளி அருகே சாலைமறியலில் ஈடுபட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 27 July 2019 4:00 AM IST (Updated: 26 July 2019 11:37 PM IST)
t-max-icont-min-icon

உத்தனப்பள்ளி அருகே பெண் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக சாலைமறியலில் ஈடுபட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள பெல்லட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 30). இவருடைய மனைவி புவனேஸ்வரி (26). கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் புவனேஸ்வரி வீட்டில் தூக்கில் மர்மமான முறையில் தொங்கினார். இதற்கிடையே புவனேஸ்வரியின் சாவில் சந்தேகம் உள்ளது எனக்கூறி உறவினர்கள் மற்றும் அவரது சொந்த ஊரான தேவகானப்பள்ளியை சேர்ந்த பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் பெல்லட்டிக்கு திரண்டு வந்து சாலையின் நடுவில் பெரிய கற்களையும், மரங்களையும் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை. மேலும், புவனேஸ்வரியின் உடலையும் எடுத்து செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. இரவு வரை இந்த மறியல் போராட்டம் நடந்தது.

இந்தநிலையில் சாலைமறியலில் ஈடுபட்டதாக தேவகானப்பள்ளியை சேர்ந்த செல்வம், பிரபு, பெரியசாமி, முருகன் உள்ளிட்ட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், சாலைகளில் கற்கள், மரங்களை போட்டு போக்குவரத்து இடையூறு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story