வாய்க்கால் தூர்வாரும் பணியை அந்தந்த பகுதி விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை


வாய்க்கால் தூர்வாரும் பணியை அந்தந்த பகுதி விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
x
தினத்தந்தி 27 July 2019 4:30 AM IST (Updated: 27 July 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

வாய்க்கால் தூர்வாரும் பணியை அந்தந்த பகுதி விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என நாமக்கல்லில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

நாமக்கல், 

நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதங்களின் விவரம் வருமாறு:-

விவசாயி மெய்ஞானமூர்த்தி:-மரவள்ளி விவசாயிகளை சேகோசர்வில் இணை உறுப்பினர்களாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர் ஆசியா மரியம்:-பரிசீலனை செய்யப்படும்.

விவசாயி ராஜேந்திரன்:-தென்னை மரத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். குறிப்பாக தென்னை மரத்தை நல்ல உரம் மற்றும் நீர்வளம் கொடுத்து வளர்க்க 3 ஆண்டுகள் ஆகிறது. அந்த காலத்தை கருத்தில் கொண்டு வளர்க்கப்படும் தென்னை மரங்களுக்கும் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது மேலாளர் பதவியில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான அதிகாரியை பணி அமர்த்த வேண்டும்.

கலெக்டர்:- அது குறித்து ஏற்கனவே வலியுறுத்தப்பட்டு உள்ளது. பரிசீலனை செய்யப்படும்.

விவசாயி சரவணன்:- கால்நடைகளுக்கான தீவனங்களுக்கு நாள்தோறும் 60 முதல் 70 ரூபாய் செலவு ஆகிறது. மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் வரை செலவாகிறது. எனவே கால்நடைகளின் தீவனங்களுக்கான தொகையை கால்நடை பராமரிப்பு துறையிடம் வாங்கி தர வேண்டும்

கலெக்டர்:- பரிசீலனை செய்யப்படும்.

விவசாயி குப்புத்துரை:- ராஜவாய்க்கால், குமாரபாளையம், பொய்யேரி, மோகனூர் வாய்க்கால்களை தூர் வார டெண்டர் விடப்பட உள்ளதாக நாளிதழ் ஒன்றில் தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பதிலாக வாய்க்கால் தூர்வாரும் பணியை அந்தந்த பகுதி விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் விவசாய பணிகளுக்கு மானிய விலையில் அம்மா சிமெண்டு வழங்க வேண்டும். அதேபோல் பட்டா மாறுதல் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

கலெக்டர்:- அது குறித்து மனு அளியுங்கள். பட்டா மாறுதல் குறித்த புகார் தொடர்பாக ஆய்வு செய்யப்படும்.

விவசாயி பெருமாள்:- விவசாயிகளுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்:- உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி துரைசாமி:-விவசாய பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும். பசும் பாலிற்கு லிட்டர் ஒன்றிற்கு ரூ.40-ம், எருமை பாலிற்கு ரூ.50-ம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்:- பரிசீலனை செய்யப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் சேகர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயலட்சுமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story