நெல்லையில் நாளை காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா தனுஷ்கோடி ஆதித்தன் பேட்டி


நெல்லையில் நாளை காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா தனுஷ்கோடி ஆதித்தன் பேட்டி
x
தினத்தந்தி 27 July 2019 4:00 AM IST (Updated: 27 July 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காங்கிரஸ் கட்சியின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கூறினார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா, காமராஜர் பெயரில் விருது வழங்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நெல்லை சங்கீத சபாவில் நடக்கிறது. நான் (தனுஷ்கோடி ஆதித்தன்) தலைமை தாங்குகிறேன். மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் வரவேற்று பேசுகிறார்.

விழாவில் ‘பெருந்தலைவரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் ஆட்சி பணியா? அரசியல் பணியா?‘ என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து 5 ஆயிரம் ஏழைகளுக்கு வேட்டி, சேலை, தையல் எந்திரம், குக்கர், மிக்சி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு காமராஜர் பெயரில் விருது வழங்கப்படுகிறது. காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டிய 11 அணைகளின் படங்களும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். விழாவில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., செயல் தலைவர்கள் மயூரா ஜெயக்குமார், வசந்தகுமார் எம்.பி. உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள குளத்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் தூர்வாரி சுத்தப்படுத்தப்படுகிறது. இந்த பணியை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story