போலி மதுபானங்கள் விற்பனை செய்வதாக புகார், விழுப்புரம் உயர்ரக டாஸ்மாக் கடையில் போலீசார் அதிரடி சோதனை
போலி மதுபானங்கள் விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் உயர்ரக டாஸ்மாக் கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
விழுப்புரம்,
விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில் உயர்ரக மதுபானங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடை கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக நேற்று விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையில் மது விலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் போலீசார் அந்த கடைக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடையில் என்னென்ன ரக மதுபான வகைகள் வந்து இறங்கியுள்ளன, கூடுதலாக மதுபாட்டில்கள் ஏதேனும் வந்துள்ளதா? என்றும் இருப்பு புத்தகம், விற்பனை பட்டியல், மதுபானங்கள் பெறப்பட்டதற்கான ரசீதுகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை 6.30 மணி வரை நடந்தது. சோதனையின்போது 132 மதுபாட்டில்கள் கூடுதலாக இருந்தது தெரியவந்தது. மேலும் மதுபான வகைகளின் தயாரிப்பு தொகுப்பு குறியீடு எண்ணும், ரசீதில் குறிப்பிடப்பட்ட எண்ணும் மாறுபாடாக இருந்ததும் கண்டறியப்பட்டது.
இதனால் அந்த மதுபான வகைகள் போலி மதுபானங்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து கடையின் ஊழியர்களிடம் கேட்டதற்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் தவறுதலாக இறக்கி விட்டு சென்றிருக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசாரிடம் கேட்டதற்கு அவர்கள் கூறுகையில், உயர்ரக மதுபான கடையில் சோதனை செய்ததில் போலி மதுபானங்கள் இல்லை என்பது புலனாகிறது. மதுவகைகளை இறக்கி வைக்கும் தொழிலாளர்கள், உடைந்த 2 பெட்டி மதுபானங்களுக்கு பதிலாக கூடுதலாக இறக்கிவிட்டனர். இருப்பு பட்டியலில் கணக்கு சரியாக வராததால் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது போன்ற தோற்றம் உருவானது என்றனர்.
இதுபற்றி டாஸ்மாக் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில், சேமிப்பு கிடங்கில் இருந்து 54 மதுபாட்டில்களை அனுப்புவதற்கு பதிலாக கூடுதலாக 132 பீர்பாட்டில்கள் அடங்கிய பெட்டிகளை தவறுதலாக அனுப்பி வைத்துவிட்டனர். குடோனில் இருந்து கவனக்குறைவாக மதுபான வகைகளை அனுப்பிய சம்பந்தப்பட்ட நபருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும். மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் எதிலும் போலியான மதுபானங்கள் கிடையாது என்றார்.
போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனையினால் அந்த மதுபான கடையில் விற்பனை பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story