ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுவிக்கக்கோரி, உண்ணாவிரதம் நடத்த அனுமதி மறுப்பு, பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் வாடும் 7 பேரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததால் தஞ்சையில், பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுகின்ற சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட்பயஸ் ஆகிய 7 பேரை தமிழக அமைச்சரவை பரிந்துரை மற்றும் சட்டசபை தீர்மானத்தின்படி விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சில அமைப்பினர் புகுந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தக்கூடும் என்ற ரகசிய தகவல் கிடைத்ததாலும், விடுதலை சம்பந்தமான பிரச்சினை அரசின் பரிசீலனையில் உள்ளதாலும் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிக்க இயலாது என தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) செங்குட்டுவன் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் அறிவித்தபடி பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று காலை ஒன்று கூடினர். இதனால் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுகுமாரன், டேவிட் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அனுமதியை மீறி உண்ணாவிரதம் இருந்தால் கைது செய்வதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். ஆனால் உண்ணாவிரதத்திற்கு பதிலாக பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாரதி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், மக்கள் அதிகாரம் அமைப்பின் பொருளாளர் காளியப்பன், தமிழ் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் வைகறை, சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் விடுதலைக்குமரன், தமிழ் தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் பாலன், தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பழனிராசன், வக்கீல் சந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story