கலெக்டர் கலந்து கொள்ளாததை கண்டித்து, குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு - நாகையில் பரபரப்பு
நாகையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொள்ளாததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்,
நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நாகை மாவட்டத்தில் உள்ள திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் விவசாயிகளின் ஒரு தரப்பினர், குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சுரேஷ்குமார் கலந்து கொள்ளாததை கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து கூட்ட அரங்கு நுழைவு வாயிலில் நின்று கோஷங்களை எழுப்பினர். அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடந்த 23-ந் தேதி அனைத்து கட்சி மற்றும் விவசாயிகள் சார்பில் பேரணி நடைபெற்றது. பின்னர் மனு கொடுக்க வந்த போது அலுவலகத்தில் கலெக்டர் இல்லை. இன்றும் ( அதாவதுநேற்று) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் கலெக்டர் கலந்து கொள்ளவில்லை. இதனை கண்டித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததை ரத்து செய்ய கோரியும் கோஷங்களை எழுப் பினர்.
இதனிடையே மற்றொரு தரப்பினர் வருவாய் அலுவலரை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பியவாறு அங்கிருந்து வெளியேறினர். இந்த சம்பவத்தால், கூட்ட அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பேசும் போது கூறியதாவது:-
விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சரபோஜி:-
நாகை மாவட்டத்தில் நான்கு வழிச்சாலைக்காக விவசாயிகளின் நிலங்களை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி எடுத்து கொண்டு அதற்கு உரிய இழப்பீட்டு தொகை முழுமையாக வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். இயற்கை சீற்றங்களால் பல ஆண்டுகளாக தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நாகை மாவட்ட விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். சேமங்கலம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் குரு.கோபி கணேசன்:-
காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும். மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும். மயிலாடுதுறையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குறுவைக்கான பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தை அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் செயல் படுத்தவேண்டும்.
கிராம விவசாயிகள் சங்க தலைவர் மணியன்:-
கஜா புயலில் வேதாரண்யம் ஒன்றியத்தில் 10 ஆயிரம் எக்டேருக்கு மேல் சவுக்கு மரங்கள் சாய்ந்து விழுந்தன. எக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 500 வீதம் நிவாரணம் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் அறிவித்து, கிராம நிர்வாக அலுவலரால் அனைத்து கிராமங்களிலும் சவுக்கை மரங்கள் கணக்கெடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிவாரண தொகை வழங்கப்படவில்லை. எனவே, சவுக்கு மரத்திற்கான நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண்மை உற்பத்தி மற்றும் குறைதீர்க்கும் குழு உறுப்பினர் கணேசன்:-
குடிமராமத்து பணிகள் தொடங்கியுள்ள நிலையில் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் விவசாயிகளாக இல்லாதவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். உடனடியாக ஆய்வு செய்து விவசாயிகள் இல்லாதவர்களை நீக்கிட வேண்டும். மானிய விலையில் வழங்கப்படும் இடுபொருட்கள் உடனடியாக வழங்க வேண்டும். புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறி யிருந்தனர்.
Related Tags :
Next Story