தியாகதுருகம் அருகே, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி மாணவர்களுடன் பெற்றோா் போராட்டம்
தியாகதுருகம் அருகே ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி மாணவர்களுடன் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே கொங்கராயப்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. ஆனால் பள்ளியில் தற்போது தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்களில் யாரேனும் ஒருவர் விடுமுறை எடுத்தாலோ அல்லது அலுவலக பணி காரணமாக வெளியில் சென்றாலோ ஒரே ஒரு ஆசிரியர் மூலம் மட்டுமே வகுப்பு நடத்தும் நிலை உள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு திறன் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது. மேலும் இப்பள்ளியில் உள்ள ஒரு கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் காலியாக உள்ள 2 ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள பழைய பள்ளி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும், மேலும் பள்ளிக்கு பின் புறம் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் ரவி, வட்டார கல்வி அலுவலர் முத்துசாமி, பள்ளி துணை ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உங்களது கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையேற்ற பெற்றோர் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் மாணவர்களும் தங்களது வகுப்பறைக்கு சென்றனர். பெற்றோர் மற்றும் மாணவர்களின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story