அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் வெளிநடப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு


அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் வெளிநடப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 27 July 2019 3:30 AM IST (Updated: 27 July 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் பாசனத்திற்கு மட்டும் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. அப்படி யெனில் கரூர் புறக்கணிக்கப்பட்ட மாவட்டமா? என கேள்வி எழுப்பி, அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடக்கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர், 

கரூர் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில், கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக் கழிவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க செயலாளர் ராமலிங்கம் பேசுகையில், கரூரில் கடந்த 6 மாதங் களுக்கும் மேலாக அமராவதி ஆற்றில் நீர்வரத்து இன்றி வறட்சியான சூழல் உள்ளது. இதனால் ஆண்டாங்கோவில் கீழ்பாகம் உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. மேலும் விவசாய தேவைக்கும் நீர் இல்லை. இந்த நிலையில் அமராவதி அணையில் இருந்து திருப்பூர் மாவட்ட பாசன பகுதிகளுக்கு உரிய அனுமதி வழங்கப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது கரூர் கடைமடை விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. அமராவதி அணை கட்டப்பட்ட காலத்தில் இருந்தே கடைமடைக்கு தான் முன்னுரிமை என்கிற அடிப் படையில் திறந்துவிடப்பட்ட நிலை தற்போது மாறியுள்ளது. எனவே கரூர் அமராவதி ஆற்றில் விரைவில் தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர், அணை திறப்பு என்பது முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறது. எனவே கோரிக்கை குறித்து அரசுக்கு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய ராமலிங்கம், அப்படியெனில் கரூர் மாவட்டம் புறக் கணிக்கப்பட்ட மாவட்டமா? ஏன் இப்படி வஞ்சிக்கின்றனர் என கூறிகொண்டிருக்கையில், விவசாயிகள் சிலர் எழுந்து பேச முற்பட்டனர். அப்போது ஒவ்வொருவராக பேசுங்கள்... என கலெக்டர் தெரிவித்தார். எனினும் கூட்டத்தில் சல சலப்பு நிலவியதால், இது என்ன சந்தைகடையா? அமைதியாக உட்காருங்கள்... என்று அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ராமலிங்கத்துடன் சேர்ந்து விவசாயிகள் சிலர் கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளி நடப்பு செய்தனர். கூட்டரங்கின் வளாகத்தினுள் நின்று கொண்டிருந்த அவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர்கள் லியாகத் (குளித்தலை), சந்தியா (கரூர்) ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அதில் உடன்பாடு ஏற்படாததால் அதிகாரிகள் மீண்டும் கூட்டரங்கிற்கு சென்று விட்டனர்.

இதையறிந்ததும் கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் உதய குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் அமிர்தலிங்கம், சத்தியபிரியா உள்பட ஆயுதப்படை போலீசார் அங்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அமைதிப்படுத்தினர். இதற்கிடையே கூட்டத்திலிருந்து கலெக்டர் அன்பழகன் வெளியேறியதால், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் கூட்டத்தை நடத்தினார்.

இந்த நிலையில் போராட்டத்தை கைவிட்ட ராமலிங்கம் உள்பட விவசாயிகள் கூட்டரங்கிற்கு சென்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கோரிக்கை மனுகொடுத்தனர். அப்போது, ஏன் இப்படி வெளிநடப்பு செய்தீர்கள். கலெக்டர் எப்போதும் கனிவுடன் தானே கோரிக்கையை கேட்கிறார் என வருவாய் அதிகாரி கூறி மனுக்களை பெற்றார். இதைத் தொடர்ந்து அந்த விவசாயிகள் கூட்டத்தில் தொடர்ந்து பங்கேற்றனர்.

முன்னதாக கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கரூர் மாவட்ட தலைவர் வி.கே.தங்கவேல், நரிகாட்டு வலசுவை சேர்ந்த விவசாயி ராஜமாணிக்கம், குளித் தலையை சேர்ந்த விவசாயி கோபால் தேசிகன், காவிரி நீர்பாசன விவசாயிகள் நலசங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் ஆகியோர் பேசினர். இதே போல் கரூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் கால்நடைதுறையின் மூலம் வைக்கோல் வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும். கல்லடை கிராமத்தில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர்.

கூட்டத்தில், வருவாய் கோட்டாட்சியர்கள் சந்தியா (கரூர்), லியாகத் (குளித்தலை) உள்பட அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்க பிரதி நிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story