ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு: இடைத்தேர்தல் மூலம் மீண்டும் நிரூபித்து காட்டியது, சிஞ்சோலி
கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது.
15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவால் கூட்டணி அரசு கவிழ்ந்தது. தற்போது எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்துள்ளது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபையில் ஆட்சி அரியணையில் அமரும் கட்சியை முடிவு செய்வதில் கலபுரகி மாவட்டத்தில் உள்ள சிஞ்சோலி சட்டசபை தொகுதி முக்கிய பங்காற்றி வருகிறது என்றால் மிகையல்ல. இதுபற்றி இங்கே விரிவாக அலசி பார்ப்போம்...
இந்த தொகுதி இதுவரை இடைத்தேர்தல் உள்பட மொத்தம் 14 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 10 தடவையும், ஜனதாதளம்(எஸ்) ஒரு தடவையும், ஜனதாதளம்(யு) ஒரு தடவையும், பா.ஜனதா 2 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. இதில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி வீரேந்திர பட்டீல் 4 தடவையும், தேவேந்திரப்பா ஹாலப்பா ஜமாதர் 3 முறையும் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளனர்.
1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதி 2004-ம் ஆண்டு வரை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு ஆதிதிராவிடர் பிரிவினருக்கு இந்த தொகுதியாக மாற்றப்பட்டது.
1957-ம் ஆண்டு தேர்தலில் சிஞ்சோலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், வீரேந்திர பட்டீல். அதுபோல் பி.ஜாட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி கர்நாடகத்தில் உதயமானது.
1962-ம் ஆண்டு தேர்தலில் இங்கு வீரேந்திர பட்டீல் வெற்றி பெற்று 2-வது தடவையாக எம்.எல்.ஏ.வாக தேர்வானார். கர்நாடகத்தில் எஸ்.ஆர்.காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.
1967-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வீரேந்திர பட்டீல் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றியை ருசித்தார். அந்த சமயத்தில் எஸ்.நிஜலிங்கப்பா தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அரியணையில் அமர்ந்தது.
1972 மற்றும் 1977-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தேவேந்திரப்பா ஹாலப்பா ஜமாதர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேவராஜ்அர்ஸ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.
1983-ம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர் தேவேந்திரப்பா ஹாலப்பா ஜமாதர் போட்டியிட்டு 3-வது தடவையாக எம்.எல்.ஏ.வாக தேர்வானார். அப்போது ஆர்.குண்டுராவ் தலைமையில் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி பீடத்தில் அமர்ந்தது.
1989-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய வீரேந்திர பட்டீல் வெற்றி வாகை சூடினார். அவரது தலைமையில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் மலர்ந்தது.
1994-ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் வைஷ்நாத் பட்டீல் என்பவர் ஜனதாதளம் சார்பில் போட்டியிட்டு வெற்றிக்கொடி நாட்டினார். அதுபோல் கர்நாடகத்தில் தேவேகவுடா தலைமையில் ஜனதாதளம் கட்சி ஆட்சி கட்டிலில் அமர்ந்தது.
1999-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கைலாஷ்நாத் வெற்றி பெற்றார். எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.
2004-ம் ஆண்டு தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) சார்பில் போட்டியிட்ட வைஷ்நாத் பட்டீல் 2-வது தடவையாக எம்.எல்.ஏ.வாக தேர்வானார். அதுபோல் கர்நாடகத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. அப்போது காங்கிரசை சேர்ந்த தரம்சிங் முதல்-மந்திரியாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2008-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் சுனில் வாலாப்பூர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வானார். எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி மலர்ந்தது.
2013-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் உமேஷ் ஜாதவ் வெற்றி பெற்றிருந்தார். சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கர்நாடகத்தில் 5 ஆண்டு காலம் ஆட்சி செய்தது.
2018-ம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர் உமேஷ் ஜாதவ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் காங்கிரசும், ஜனதாதளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. முதல்-மந்திரியாக குமாரசாமி இருந்தார்.
இதற்கிடையே உமேஷ் ஜாதவ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் ஐக்கியமானார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் கலபுரகி தொகுதியில் களமிறங்கிய அவர் வெற்றி வாகை சூடி எம்.பி.யாக தேர்வாகியுள்ளார். அவர் சிஞ்சோலி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் கடந்த மே மாதம் இடைத்தேர்தல் நடந்தது. இதில் பா.ஜனதா சார்பில் உமேஷ் ஜாதவ் மகன் அவினாஷ் ஜாதவ் போட்டியிட்டார். அவர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். தற்போது எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இடைத்தேர்தல் மூலம் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதில் தனக்கு நிகர் தானே என்று சிஞ்சோலி தொகுதி மீண்டும் ஒரு முறை நிரூபித்து காட்டியுள்ளது.
Related Tags :
Next Story