மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் தெற்கு உழவர் சந்தை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பேச்சு


மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் தெற்கு உழவர் சந்தை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 27 July 2019 4:05 AM IST (Updated: 27 July 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் திருப்பூர் தெற்கு உழவர் சந்தை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

கொங்கு ராஜாமணி(கொங்குநாடு விவசாயிகள் கட்சி):-

திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு முன்பு ரோட்டோரம் கடைகளை அமைத்து காய்கறி வியாபாரம் செய்கிறார்கள். இதனால் கிராமப்புறங்களில் இருந்து காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்யும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் உள்ளது. அதுபோல் அரசியல்வாதிகள் தலையீடு காரணமாக உழவர் சந்தைக்குள் கலாசு தொழிலாளர்கள் அத்துமீறும் செயலில் ஈடுபடுகிறார்கள். அங்குள்ள அதிகாரியும் இதுபற்றி கண்கொள்ளவில்லை. தெற்கு உழவர் சந்தை விவசாயிகளுக்கும், ரோட்டோர வியாபாரிகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக முறைப்படுத்த வேண்டும்.

உயர்மின் கோபுரங்கள் விவசாய நிலங்கள் வழியாக அமைக்கும்போது உரிய இழப்பீடு தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். பெருமாநல்லூரில் உயர்மின் கோபுரப்பாதை அமைப்பதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய வேண்டும் என்றார். இதே கோரிக்கையை வலியுறுத்தி மேலும் பல விவசாயிகள் பேசினார்கள்.

கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி:-

தெற்கு உழவர் சந்தைக்கு வெளியே ரோட்டோர கடைகள் அமைப்பது தொடர்பாக திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு தீர்வு காணப்படும். உயர்மின் கோபுரம் விவசாய நிலங்களில் அமைக்கும் பணி நடந்த பின்னரும், இழப்பீடு தொகை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்றால் என்னிடம் புகார் தெரிவியுங்கள். அதை பெற்றுத்தர முழு நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி சோமசுந்தரம்:-

கேத்தனூர் பகுதியில் விசைத்தறி பண்பாட்டு மையம் அமைக்க உள்ளதாகவும், அதில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சாய, சலவைப்பட்டறைகள் அமைத்தால் நிலத்தடிநீர் மாசுபடும். இதை கண்காணிக்க வேண்டும் என்றார்.

கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி:-

விசைத்தறி பண்பாட்டு மையத்தில் சாய, சலவைப்பட்டறைகள் அமைப்பது தொடர்பாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இதுகுறித்து கண்காணிக்கப்படும்.

பொன்னுசாமி(மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்கம்):-

மங்கலம் வேட்டுவபாளையம் குளத்தில் தண்ணீர் நிரம்பினால் மங்கலம், கணபதிபாளையம், எம்.செட்டிப்பாளையம், ஆட்டையம்பாளையம் பகுதிகளில் நிலத்தடி நீர் பெருகும். தற்போது குளத்தில் வண்டல் மண் எடுத்து ஆழப்படுத்தினால் அதிக அளவு தண்ணீரை சேமிக்க முடியும். வண்டல் மண் அள்ள அனுமதிக்க வேண்டும். அதுபோல் எம்.செட்டிப்பாளையம் குட்டையில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.


Next Story