காவலர்கள் எக்காரணத்தை கொண்டும் குற்றவாளிகளுடன் சேர்ந்து விடக்கூடாது போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அறிவுரை


காவலர்கள் எக்காரணத்தை கொண்டும் குற்றவாளிகளுடன் சேர்ந்து விடக்கூடாது போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அறிவுரை
x
தினத்தந்தி 27 July 2019 3:45 AM IST (Updated: 27 July 2019 4:07 AM IST)
t-max-icont-min-icon

காவலர்கள் எக்காரணத்தை கொண்டும் குற்றவாளிகளுடன் சேர்ந்து விடக்கூடாது என்று போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அறிவுரை வழங்கினார்.

திருச்சி, 

காவல்துறையில் புதிதாக பணிக்கு சேர்ந்து பயிற்சி முடித்த மாநகரத்தை சேர்ந்த 225 காவலர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு நடந்தது. போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கலியமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். துணை கமிஷனர் நிஷா, உதவி கமிஷனர்கள் கபிலன், விக்னேஷ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கமிஷனர் அமல்ராஜ் பேசியதாவது:-

முன்பெல்லாம் காவல்துறையினரை பார்த்தால் பொதுமக்களுக்கு ஒரு பயம் இருக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை. ஒரு விபத்து ஏற்பட்டாலோ அல்லது இயற்கை பேரழிவு போன்ற எந்த விஷயமாக இருந்தாலும் அந்த பிரச்சினையில் இருந்து வேகமாக இயல்புநிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் காவலர்களின் பணியாக உள்ளது. சமூக சூழல் மாறிகொண்டே இருக்கும். அதற்கேற்ப ஈடுகொடுத்து பணியாற்ற வேண்டியது காவலர்களின் கடமை. முன்னெப்போதும் இல்லாத வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளால் ஒவ்வொரு தனிமனிதனும் பத்திரிகை நிருபராக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். நமது செயல்பாடு திரைமறைவில் இருக்கிறது என்று மட்டும் நினைக்க கூடாது. நொடிப்பொழுதில் செல்போன் கேமரா மூலமாகவோ, கண்காணிப்பு கேமரா மூலமாகவோ வெளியாகி விடும். ஆகவே பொதுஇடத்தில் காவலர்களின் பணி மெச்ச தகுந்த வகையில் இருக்க வேண்டும். காவலர்கள் எக்காரணத்தை கொண்டும் குற்றவாளிகளோடு சேர்ந்து விடக்கூடாது. அப்படி சேர்ந்துவிட்டால் நாமும் குற்றவாளியாக மாறி விடுகிறோம். காவல் பணியில் கடைசிவரை நேர்மையை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story