கடந்த 7 வருடங்களாக விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை; குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார்


கடந்த 7 வருடங்களாக விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை; குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார்
x
தினத்தந்தி 27 July 2019 4:42 AM IST (Updated: 27 July 2019 4:42 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் கடந்த 7 வருடங்களாக இலவச மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு இணைப்பு வழங்கப்படவில்லை என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் கூறப்பட்டது.

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும், விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நெல் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டப்படாமல் வாடகை கட்டிடங்களிலேயே கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருவதாகவும், இதனால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதால் கொள்முதல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதோடு, தேவைப்படும் அளவுக்கு கூடுதல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன் பேசுகையில், மாவட்டம் முழுவதும் கடந்த 2012-ம் ஆண்டு முதல் இதுவரை இலவச மின்சார இணைப்பு கேட்டு 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால் இதுவரை இலவச மின்சார இணைப்பு யாருக்கும் வழங்கப்படவில்லை எனவும் மின்வாரிய அதிகாரிகள் 90 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தவறான தகவல் தந்துள்ளதாக புகார் கூறினார்.

இதற்கு பதில் அளித்த கலெக்டர் சிவஞானம், இது பற்றி ஆய்வு செய்து இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதோடு, மின் வாரிய அதிகாரிகள் இலவச மின்சார இணைப்பு குறித்து சரியான தகவல்கள் அளிக்குமாறு வலியுறுத்தினார்.

நரிக்குடி அருகே இருஞ்சிறை கிராமத்தில் செங்கமடை என்ற விவசாயி காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருவதாகவும், அவருக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதுபற்றி விசாரித்து பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார்.

Next Story