காரைக்குடியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வடமாநில கும்பல் சிக்கியது


காரைக்குடியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வடமாநில கும்பல் சிக்கியது
x
தினத்தந்தி 27 July 2019 5:00 AM IST (Updated: 27 July 2019 6:13 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வடமாநில கும்பலை தேவகோட்டையில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

தேவகோட்டை,

தேவகோட்டை திருப்பத்தூர் சாலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு ஷாப்பிங் கடையில் நள்ளிரவு ஷட்டர் கதவுகளை மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்தனர். பின்னர் பணப் பெட்டியில் இருந்த ரூ.56 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இதேபோல் அதே சாலையில் உள்ள மெடிக்கல் கடையின் பூட்டை உடைத்து ரூ.21 ஆயிரம் திருட்டு போனது. இந்த திருட்டு குறித்து தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தேவகோட்டை மற்றும் காரைக்குடியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணித்தனர். மேலும் திருடர்களின் செல்போன் தொடர்புகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. அதில் வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் திருட்டில் சம்பந்தப்பட்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இந்தநிலையில் காரைக்குடியில் உள்ள லாட்ஜில் அந்த வடமாநில திருட்டு கும்பல் தங்கியிருப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். அந்த கும்பல் தங்களது காரில் புறப்பட தயாராக இருந்தபோது போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அந்த காரில் 4 பேர் இருந்தனர். விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் மாலிக்(வயது 41), இவரது தம்பி கணேஷ் மாலிக்(39), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அசோக்குமார் மால் ஜெயின்(46), கர்நாடகத்தை சேர்ந்த சோசில் குலாப் பட்டான்(21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்து தேவகோட்டை போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் இந்த கும்பல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடைகளின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியது தெரியவந்தது. அவர்கள் இதுபோன்று எங்கெங்கு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னதாக அவர்கள் வைத்திருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கும்பலை பிடித்த குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் மற்றும் போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.

Next Story