சப்-கலெக்டரை கண்டித்து, தனியார் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் போராட்டம் - பெண்ணாடம் அருகே பரபரப்பு


சப்-கலெக்டரை கண்டித்து, தனியார் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் போராட்டம் - பெண்ணாடம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 27 July 2019 4:15 AM IST (Updated: 27 July 2019 5:53 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே சப்-கலெக்டரை கண்டித்து தனியார் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே உள்ள எறையூரில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலை வளாகத்தில் உள்ள குடியிருப்புகளில் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெண்ணாடம் மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.10 லட்சம் மின்கட்டணத்தை சர்க்கரை ஆலை நிர்வாகம் செலுத்தவில்லை. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மின்வாரிய துறையினர், தனியார் சர்க்கரை ஆலையில் மின் இணைப்பை துண்டித்தனர்.

இதன் காரணமாக ஆலை வளாகத்தில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வந்த தொழிலாளர்கள் மின்சாரம் இன்றி இரவு நேரத்தில் பெரிதும் அவதியடைந்தனர். மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் குடிநீர் வினியோகமும் தடைபட்டது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நேற்று காலை விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரசாந்தை செல்போனில் தொடர்பு கொண்டு, நடவடிக்கை எடுக்கும்படி கூறினர். அப்போது சப்-கலெக்டர் சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் சப்-கலெக்டரை கண்டித்து ஆலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி தாசில்தார் (பொறுப்பு) ரவிச்சந்திரன், பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சீனுவாசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், சர்க்கரை ஆலையில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் தொழிலாளர்களுக்கு கூடுதல் பங்கீடு வழங்கப்படும். குடியிருப்புகளுக்கு மட்டும் இன்னும் 2 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும். மேலும் மினிகுடிநீர் தொட்டி அமைக்கப்படும் என்றனர்.

அதனை ஏற்றுக் கொண்ட தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர்கள் விருத்தாசலம் சாகுல் அமீது, மங்கலம்பேட்டை ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story