கூடலூர், பந்தலூரில் பலத்த மழை, வீடுகள், விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்தது


கூடலூர், பந்தலூரில் பலத்த மழை, வீடுகள், விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்தது
x
தினத்தந்தி 27 July 2019 4:00 AM IST (Updated: 27 July 2019 5:54 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர், பந்தலூரில் பலத்த மழை பெய்தது. மேலும் வீடுகள், விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்தது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் கூடலூர் பகுதியில் உள்ள ஓவேலி, பாண்டியாறு, பொன்னானி, சோலாடி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் தொடர் மழையால் அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது.

பாடந்தொரை, புத்தூர்வயல், கம்மாத்தி, அம்பலமூலா உள்பட பல இடங்களில் மழை வெள்ளம் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் வாழை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மழை தொடர்ந்து பெய்து வருவதால், விவசாய பயிர்கள் சேதம் அடையும் அபாயம் உள்ளது.

பாண்டியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் குடிநீர் திட்ட குழாய்களில் சேறும், சகதியும் நிறைந்து உள்ளது. இதன் காரணமாக நீரேற்று நிலையத்தில் இருந்து சுத்திகரிப்பு மையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் கூடலூர் நகரில் உள்ள கோழிப்பாலம், சளிவயல், நந்தட்டி, செம்பாலா, ஆனைசெத்தகொல்லி, குசுமகிரி, சின்னபள்ளிவாசல் தெரு உள்ளிட்ட இடங்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. பாண்டியாற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் நகராட்சி ஊழியர்களால் அடைப்பை சரி செய்யும் பணியை மேற்கொள்ள முடியவில்லை.

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட படச்சேரி பகுதியில் உள்ள நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நீரோடையையொட்டி உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வசித்த பொதுமக்கள், மேடான பகுதியில் உள்ள வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். மேலும் ஒலிமடாவில் விவசாய நிலங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

கொளப்பள்ளியில் இருந்து நெல்லியாளம் தேயிலை தோட்டம் வழியாக பாட்டவயல் செல்லும் இணைப்பு சாலையில் ரூபிமைன்ஸ் என்ற பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாதபடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலையில் சாலையில் சரிந்து கிடந்த மண் வெட்டி அகற்றப்பட்டது. அதன்பிறகு மதியம் 12 மணிக்கு மீண்டும் அந்த வழியே போக்குவரத்து தொடங்கியது. மேலும் அய்யன்கொல்லி அருகே புஷ்பராணி, பேபி ஆகியோரது வீட்டின் மீது மண் சரிவு ஏற்பட்டு மேற்கூரை சேதமானது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர் நந்தகோபால் ஆகியோர் பார்வையிட்டனர்.

பலத்த மழையால் கூடலூர், பந்தலூரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மேலும் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் அவர்கள் சிரமம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து தேவாலா, பந்தலூரில் உள்ள அரசு பள்ளிகளுக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளித்து கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் உத்தரவிட்டார். நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரையிலான நிலவரப்படி தேவாலாவில் 60 மில்லி மீட்டரும், பந்தலூரில் 48 மில்லி மீட்டரும், கூடலூரில் 16 மில்லி மீட்டரும் மழை அளவு பதிவாகி உள்ளது.

Next Story