நத்தம் பகுதியில் ரூ.1¼ கோடியில் குடிமராமத்து பணிகள் - கலெக்டர் தகவல்
நத்தம் பகுதியில் ரூ.1¼ கோடியில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
திண்டுக்கல்,
நத்தம் தாலுகா பூதக்குடி கிராமம் பணங்குடி கண்மாயில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் விவசாயிகள் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வரத்து வாய்க்கால்கள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் மற்றும் பிற நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகள் விவசாயிகள் பங்களிப்புடன் தற்போது நடந்து வருகிறது.
பணங்குடி கண்மாயின் வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல், கண்மாயின் கரைப்பகுதியில் வளர்ந்திருக்கும் செடி, கொடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் நத்தம் பகுதியில் உள்ள லக்கன்குளம், சமுத்திராபட்டி முத்துப்பிள்ளை கோணேந்தர் குளம், அழகன் கோடாங்கிகுளம், பேயன்காத்தான்குளம், வெள்ளப்பிச்சான்குளம் ஆகிய 5 குளங்களில் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் குடிமராமத்து பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதையடுத்து நத்தம் தாலுகா அம்மாபட்டியில் செயல்படும் அரசு ஆரம்ப பள்ளி, அங்கன்வாடி மையங்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் எப்படி என்று மாணவ-மாணவிகளிடமே கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள், வருகை பதிவேடு உள்ளிட்டவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story