கதிராமங்கலம் அரசு பள்ளியில், மாணவர்களுக்கு கணித பாடம் நடத்திய கலெக்டர் - ஆரம்ப சுகாதார நிலைய பணிகளையும் பார்வையிட்டார்
கதிராமங்கலம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கணித பாடம் நடத்தினார். மேலும் அவர் அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய பணிகளையும் பார்வையிட்டார்.
திருப்பனந்தாள்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக போராடிய மக்கள் வேண்டுகோளை ஏற்று அங்கு அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார். அப்போது 10-ம் வகுப்பு அறைக்குள் சென்ற கலெக்டர் அண்ணாதுரை அங்கு மாணவர்களுக்கு கணித பாடம் குறித்து சில விளக்கங்களை அளித்தார். பின்னர் மாணவ- மாணவிகளுக்கு கணித பாடம் நடத்தி அவர்களிடம் சில கேள்விகளை கேட்டார். குறிப்பாக வட்டத்தின் விட்டம் குறித்தும் மாணவர்களிடம் கேள்வி கேட்ட போது மாணவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. எனவே கலெக்டர் அண்ணாதுரை கரும்பலகையில் வட்டத்தை வரைந்து வட்டத்தின் விட்டம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். மேலும் மாணவர்களிடம் கணித பாடத்தின் அவசியம் குறித்து பேசினார்.
பின்னர் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவர்களை அதிக அளவில் பள்ளியில் சேர்க்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கலெக்டர் அண்ணாதுரை ஆலோசனை நடத்தினார்.
மேலும் பள்ளிக்கு தேவையான மேஜை, நாற்காலி, உள்ளிட்ட தளவாடப்பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது திருவிடைமருதூர் தாசில்தார் சிவக்குமார், ஒன்றிய ஆணையர் ராஜு, பொறியாளர் அய்யப்பன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
தொடர்ந்து கதிராமங்கலம் ஓட்டக்கா திடலில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணிகளையும், அரசு உயர்நிலைப்பள்ளி அமைய உள்ள இடத்தையும் கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார். அப்போது அரசு உயர் நிலைப்பள்ளி கட்டப்பட உள்ள இடம் குறித்து உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் அளந்து முறைப்படுத்த உத்தரவிட்டார். மேலும் திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோவில் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் கலெக்டர் அண்ணாதுரை கலந்து கொண்டார்.
Related Tags :
Next Story