‘கழுத்து வளைய’ பெண்கள்


‘கழுத்து வளைய’ பெண்கள்
x
தினத்தந்தி 27 July 2019 1:29 PM IST (Updated: 27 July 2019 1:29 PM IST)
t-max-icont-min-icon

தாய்லாந்து-மியான்மர் எல்லைப் பகுதிக் காடுகளில் வசிக்கும் படாங் பழங்குடியினப் பெண்கள், கழுத்தில் பித்தளை வளையங்களை அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

படாங் பழங்குடி இனத்தில் ஒரு சிறுமிக்கு 5 வயதானதுமே, அவளது கழுத்தில் சுமார் ஒரு செ.மீ. தடிமன் உள்ள பித்தளை வளையத்தை அணிவித்து விடுகிறார்கள். அதன் பிறகு இரண்டாண்டுகள் கழித்து மேலும் ஒரு வளையத்தை அணிவிக்கிறார்கள். இப்படியே அப்பெண், ஒரு பெண்மணி ஆகும் வரை வளையங்களை அணிவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இவ்வாறு தொடர்ந்து அணிவிக்கப்படும் வளையங்களின் எடை, அதிகபட்சம் 9 கிலோ வரை எட்டுகிறது.

இந்த வளையங்கள், கழுத்து எலும்புகளை ஒன்றில் இருந்து ஒன்று விலக்குகின்றன, காறை எலும்புகளை கீழ்நோக்கித் தள்ளுகின்றன. அதனால், வளையங்கள் அணிவிக்கப்படும் பெண்களின் கழுத்து ஒல்லியாகவும் நீளமாகவும் ஆகிறது.

ஆனால் பெண்கள் இப்படி நீளமான கழுத்து கொண்டிருப்பதையே படாங் இனத்தினர் அழகாகக் கருதுகின்றனர். ஒரு பெண்ணுக்கு எந்த அளவு கழுத்து நீண்டிருக்கிறதோ, அந்த அளவு அவளுக்கு மணமகன் கிடைப்பது எளிதாகிறது.

படாங் மக்களின் மனோபாவம் இப்படி இருந்தாலும், ஒரு பெண் தனது வாழ்நாள் முழுவதும், எப்போதும் கழுத்தில் வளையங்களை அணிந்திருப்பது எளிதான விஷயமல்ல. அது, அசவுகரியமும் வேதனையும் தரும் விஷயம்.

ஆனால் படாங் இனப் பெண்களுக்கு வேறு வழியில்லை. ஒரு பெண்மணி தனது வயதான காலத்தில் கழுத்து வளையங்களை அகற்றினால் கூட அது அவர் உயிருக்கு ஆபத்தாகிவிடும். காரணம், வளையங்களால் ஒல்லியாகிவிட்ட கழுத்து, எளிதில் ஒடிந்துவிடும்.

காலம் மாறியுள்ள இன்றைய சூழலில், பெரும்பாலான படாங் பெண்கள் கழுத்து வளையங்கள் அணிவிக்க ஒப்புக்கொள்வதில்லை என்பது ஆறுதலான விஷயம்.

காட்டுப்பகுதியில் வசிக்கும் படாங் மக்களை திடீரென புலி கழுத்தில் தாக்குவதை தவிர்க்கத்தான், இப்படி வளையங்கள் அணியும் வழக்கம் தொடங்கியது என்று ஒரு கருத்து கூறப்படுகிறது.

Next Story