சுடுகாடுக்கு பாதை வசதி செய்து தரக்கோரி பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியல் குடியாத்தம் அருகே பரபரப்பு
குடியாத்தம் அருகே சுடுகாடுக்கு பாதை வசதி ஏற்படுத்தி தரக்கோரி பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்,
குடியாத்தம் அருகே தட்டப்பாறை பகுதியில் சுடுகாடு உள்ளது. இறந்தவர்களை கொண்டு செல்ல ஏரிக்கால்வாய் வழியாக தான் செல்ல வேண்டும். சுடுகாடுக்கு செல்லும் இந்த பாதை கடந்த 2 ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய்த்துறையினரிடம் புகார்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தட்டப்பாறையை அடுத்த சின்னகவுண்டன்பட்டியை சேர்ந்த சின்னகுழந்தை என்பவரின் மனைவி முனியம்மாள் மரணம் அடைந்தார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று பிற்பகல் 3 மணிக்கு நடந்தது. அப்போது பாதை வசதி இல்லாததால் பிணத்துடன் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தாசில்தார் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் சத்தியநாராயணா, கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், சுடுகாடுக்கு செல்லும் பாதை மிகவும் மோசமாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என்று 2 ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக பாதை வசதி செய்து தர வேண்டும் என்றனர்.
இதையடுத்து அதிகாரிகள் இன்னும் சில நாட்களில் சாலை வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story