‘ஜல்சக்தி அபியான்’ திட்டம் குறித்து மத்திய குழு ஆய்வு
வேலூர் மாவட்டத்தில் ‘ஜல்சக்தி அபியான்’ திட்டம் குறித்து மத்திய குழு ஆய்வு செய்தனர்.
வேலூர்,
மத்திய அரசால் ‘ஜல்சக்தி அபியான்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய அம்சமான மழைநீர் சேகரிப்பு குறித்து பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் அதிக வறட்சிக்குள்ளான பகுதிகளில் நீர் மேலாண்மையை மேம்படுத்த பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய அரசு அலுவலர்களை கொண்ட குழுக்களை அமைத்துள்ளது. அந்த குழுவினர் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று நீர் மேலாண்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி, வேலூர் மாவட்டத்திற்கு ‘ஜல்சக்தி அபியான்’ மண்டல அலுவலராக நியமிக்கப்பட்ட இணைச்செயலாளர் அப்துல்கரீம் தலைமையில் 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த 24-ந் தேதி முதல் வேலூர் மாவட்டத்தில் நீர் மேலாண்மை குறித்து பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பணிகளையும், வறட்சி கண்டறியப்பட்ட 38 பிர்காக்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதைத்தொடர்ந்து அந்த குழுவினர், கலெக்டர் சண்முகசுந்தரத்தை நேரில் சந்தித்து, பார்வையிட்ட பணிகள் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது கலெக்டர் சண்முகசுந்தரம், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் நீர் மேலாண்மை பணிகள் குறித்தும் தற்போது நடைபெற உள்ள வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முடிவடைந்த பின் தேர்தல் நடத்தை விதிகள் முடிவிற்கு வந்தபின் அதற்கான செயல்திட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார். மேலும், பொதுமக்களையும், மாணவர்களையும் நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பு நல்கி வருங்காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிகழா வண்ணம் நமது மாவட்டத்தை மேம்படுத்த உறுதிப்படுத்துவோம் எனவும் கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story