மகன்-மகளை குளத்தில் அமுக்கி கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை


மகன்-மகளை குளத்தில் அமுக்கி கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 July 2019 4:45 AM IST (Updated: 27 July 2019 11:11 PM IST)
t-max-icont-min-icon

பொறையாறு அருகே குடும்ப பிரச்சினையில், மகன்-மகளை குளத்து தண்ணீரில் அமுக்கி கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பொறையாறு,

நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள உத்திரங்குடி கன்னிக்கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 40). இவரது மனைவி தேவி(32). இந்த தம்பதியினருக்கு ஜனனி(8), ஜெயமித்திரன்(3) என்ற குழந்தைகள் இருந்தனர்.

ரமேஷ், சென்னையில் தங்கி ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். தேவி தனது குழந்தைகளுடன் உத்திரங்குடியில் வசித்து வந்தார். தேவிக்கும், அவரது மாமியார் மல்லிகா(65) என்பவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே குடும்ப பிரச்சினையால் சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து தேவி, தனது 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் மாமியார் மல்லிகா மற்றும் அக்கம் பக்கத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் தேவி மற்றும் அவரது குழந்தைகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குழந்தைகள் ஜெயமித்திரன், ஜனனி ஆகியோர் பிணமாக மிதந்தனர். மேலும், அந்த குளத்தின் அருகே உள்ள ஒரு மரத்தில் தேவி தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், பொறையாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு வந்தனா, பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவி மற்றும் அவரது குழந்தைகள் ஜனனி, ஜெயமித்திரன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், மாமியாருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய தேவி, தனது குழந்தைகளை குளத்தில் உள்ள தண்ணீரில் அமுக்கி கொலை செய்து விட்டு பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப தகராறில் மகன், மகளை கொன்று விட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. 

Next Story